சமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி

857

உண்மை ஊரை வலம் வரும் முன் பொய் உலகை சுற்றி வந்துவிடும்’ என்று கூறுவார்கள்..சமூக ஊடகங்களில் உண்மையான செய்திகளைவிடப் பொய்யான செய்திகளே மிக விரைவாகவும், அதிகமாகவும் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் குறித்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. 11 ஆண்டுகளில் சுமார் 1,26,000 பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியில், மக்கள் உண்மையான செய்தியை விடப் பொய்யான செய்தியை அதிகமாக நம்புவதாகவும், இதனால் அவர்கள் பொய்யான செய்தியைச் சமூக ஊடகங்களில் மிக விரைவாகப் பகிர்வதும் தெரியவந்துள்ளது. ஒரு உண்மையான செய்தி பகிரப்படும் நேரத்தில் 6 பொய்யான செய்திகள் பரவிவிடுகின்றன. உண்மையான செய்திகள் 1000 பேரைச் சென்றடைகின்றன. அதே நேரத்தில் பொய்யான செய்திகள் 1,00,000பேரை சென்றடைகின்றன. உண்மையை விடப் பொய்யான செய்திகள் 70% அதிகமாகப் பகிரப்படுகின்றன.

மக்கள் புதிய மற்றும் வித்தியாசமாகச் செய்திகளை விரும்புவதே பொய்யான செய்திகளைப் பகிர்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது. அவர்களுக்கு வரும் செய்தி உண்மையா, பொய்யா என்பதை ஆராயாமல் அதனை அவர்கள் பகிர்ந்து விடுகின்றனர். அரசியல் செய்திகள் பொய்யாகப் பகிரப்படுகிறது. இது போன்ற பொய்யான செய்திகளில் அரசியல் செய்திகள் அதிகளவில் உள்ளது. அது தவிர, நகர்ப்புற கதைகள், வணிகம், பயங்கரவாதம், அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் இயற்கைப் பேரழிவுகள் குறித்துப் பொய்யான செய்திகள் பகிரப்படுகிறது.

ஆராய்ச்சியின் சக ஆய்வாளரான பேராசிரியர் சினான் ஆல், “தவறான செய்தி மிகவும் சுவாரஸ்யமான கதை போன்றது. எனவே அது மக்களால் அதிகம் பகிரப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.