உடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை!

யாழ்.உடுப்பிட்டியில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருடிய கும்பல் நான்காவது வீட்டினை உடைத்துத் திருட முற்பட்ட வேளை அப்பகுதி மக்களால் வசமாக மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திலிருந்து மூன்று திருடர்கள் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் பொதுமக்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார். சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்ற மூவரும் சாவகச்சேரிப் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(21) பிற்பகல் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் நேற்றைய தினம் பட்டப்பகல் வேளையில் அடுத்தடுத்து மூன்று வீடுகளுக்குள் புகுந்து திருட்டுக் கும்பல் பெறுமதியான பொருட்களைத் திருடியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் திருட்டுக் கும்பலில் ஒருவனைக் கண்டு துரத்தியுள்ளனர். இது தொடர்பில் வல்வெட்டித் துறைப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களும், பொலிஸாரும் இணைந்து திருடனொருவரை மடக்கிப் பிடித்தனர்.

எனினும் அவனுடன் திருடன் வந்த ஏனைய மூன்று திருடர்களும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். திருடர்கள் வந்ததாகக் கூறப்படும் படி ரக வாகனத்தின் இலக்கம் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. குறித்த வாகன இலக்கத்தை வல்வெட்டித்துறைப் பொலிஸார் யாழ்ப்பாணத்திலிலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிற்கும் அறிவித்ததையடுத்து பொலிஸார் உஷார்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்துச் சாவகச்சேரி பொலிஸார் திருடியபின்னர் வாகனத்தில் தப்பிச் சென்று கொண்டிருந்த மூவரையும் சாவகச்சேரி நகர்ப்பகுதிக்கு அருகில் வைத்து இடைமறித்துக் கைது செய்தனர்.

இவ்வாறு கைதான மூன்று திருடர்களும் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரிப் பொலிஸாரினால் வல்வெட்டித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நபர் மண்கும்பான் சாட்டிப் பிரதேசத்தினைச் சேர்ந்தவர் என வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் புததளம் கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும்,ஒருவர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபர்களிடமிருந்து 12 கைத்தொலைபேசிகள், நான்கு சோடி கால்கொலுசுகள், இரண்டு சொனி கமரா மற்றும் பணத்துடன் கூடிய உண்டியல்,கட்டார் றியால் பணம் என்பன இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான நால்வரும் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுத் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

(தமிழின் தோழன்-)