இயற்கை வழி இயக்கத்தின் வாராந்த குடில் சந்தை யாழில் ஆரம்பமானது

6296

இயற்கை வழி இயக்கத்தின் முதல் களச் செயற்பாடாக யாழ்ப்பாணத்தில் அங்காடிக் குடிலில் வாராந்த சந்தை 06.04.2018 வெள்ளிக்கிழமை 3 மணிக்கு யாழ். போதனா வைத்தியசாலை எதிரில் சிங்கர் காட்சியறைக்கு அருகாமையில் உள்ள Juicy touch நிறுவன முன்றலில் ஆரம்பமானது.

 

வைத்திய கலாநிதி சிவன்சுதன் அவர்கள் குறித்த அங்காடிக் குடில் இயற்கை சந்தையை ஆரம்பித்து வைத்தார். ஆரம்பித்து வைத்தது மட்டுமல்லாமல் இயற்கை வழி உணவுப் பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்தார்.

குறித்த சந்தையில் இயற்கையில் விளைந்த இலை, கீரை வகைகள், கிழங்கு வகைகள், மரக்கறி வகைகள், மூலிகை கோப்பி, வடகம், மோர்மிளகாய் போன்ற சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்கள் மற்றும் பல்வேறு வகையான பாரம்பரிய இயற்கையில் விளைந்த பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்தனர்.

பிரதி வெள்ளிக்கிழமை தோறும் குறித்த சந்தை மதியத்துக்கு பின்னர் இடம்பெறுமென இயற்கை வழி இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். மக்களிடம் இயற்கை வழி உணவுகளின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இயற்கை வழி உணவுகளை உற்பத்தி செய்பவர்களுக்கு சந்தைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தான் குறித்த அங்காடிக் குடில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முற்றிலும் இயற்கை வழி வாழ்ந்த எம் சமூகத்தின் இன்றைய தலைமுறையினர் மீண்டும் எம் மரபுசார் வாழ்வியலுக்கு திரும்புவதற்கு ஊக்கமளிப்பதும் இயற்கை வழி வேளாண்மை, மருத்துவம் மற்றும் வாழ்வியல்சார் உள்ளூர் உற்பத்திகள் மக்களைச் சென்றடைவதை இலகுவாக்குவதும் அங்காடிக் குடிலின் நோக்கங்களாக உள்ளன.

இயற்கையாக வீடுகளில் விளைந்த மரக்கறிப் பொருள்களில் நுகர்வுக்கு போக எஞ்சிய மரக்கறிகளை இந்த அங்காடி குடிலின் ஊடாக பொதுமக்கள் சந்தைப்படுத்த முடியும்.

இன்று பெருமளவிலான விவசாயிகள் அளவுக்கதிகமாக செயற்கை உரங்களையும், மருந்துகளையும் பாவித்தே மரக்கறிகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

இதனால் சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்துக்களும், இதர உடலியல் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்பட காரணங்களாக அமைகின்றன.

இயற்கை வழிக்கு மாறுவது ஒன்றைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க இயற்கையில் விளைந்த உணவுகளை உண்போம். ஆரோக்கியம் காப்போம். இயற்கை வழி உணவுகளை உண்ணவேண்டியதன் அவசியத்தை எல்லோருக்கும் பரப்புவோம்.

படங்கள்: கு. வசீகரன், யோ. சர்மிக்