உறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்

இன்றைய டிஜிட்டல் உலகில், தம்பதியினரை நெருக்கமாக வைத்திருக்க உதவுகிற மொபைல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் அவர்களிடையே வாக்குவாதத்தையும் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

ஒரு குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் செல்போன் வைத்து இருக்கிறார்கள். கல்லூரி, மாணவ-மாணவிகளும் விலை அதிகமுள்ள செல்போன்களை வைத்திருக்க விரும்புகின்றனர்.

பல நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை அகற்றி நேரத்தையும் வேலையையும் எளிதாக்கிக் கொடுப்பதால் மக்கள் அனைவரும் ஐபேட், டேப்லெட் உள்ளிட்ட கருவிகளைப் பெரிதும் விரும்புகிறார்கள்

ஒருவரை ஒருவர் எளிமையாகத் தொடர்புகொள்வது, தகவல்களை அனைவரிடத்திலும் விரைவில் சென்று சேர்ப்பது என பலவற்றுக்கும் உதவும் இதே ஸ்மார்ட் போன்கள் பல பிரச்சனைகளுக்கும் வித்திடுகின்றன.

ரஷ்யாவைச் சேர்ந்த காஸ்பர்ஸ்கை ஆய்வகம் நடத்திய சமீபத்திய ஆய்வில், 55 சதவிகித தம்பதியினருக்கிடையே மொபைல் பயன்பாடுகளால் பிரச்சனைகள் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. தம்பதியினரை அன்பாகவும், நெருக்கமாகவும் வைத்துக் கொள்ள உதவும் அதே நேரத்தில் அவர்களின் உறவுகளில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில் மொபைல்கள் அதிக பங்கு வகிக்கின்றன என்று இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

தம்பதிகள் தங்கள் உறவை வலுப்படுத்த இந்த சாதனங்கள் மூலம் தொடர்ந்து பேசுவது, ஆன்லைனில் மெசேஜ் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்று டிஜிட்டல் மயமான நிலையில், முகநூல் கணக்குகள் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகளால் உறவு மேம்படுத்தப்படுவதாக 53 சதவிகித தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இதில், கவனிக்க வேண்டிய சில எதிர்மறைகளும் உள்ளன.அதாவது மொபைல்களின் அதிக பயன்பாடு மற்றும் சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட காரணங்களால் 55 சதவிகித காதல் ஜோடிகள் மத்தியில் அதிக வாக்குவாதங்களும் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன என்று தெரியவந்துள்ளது..

சாப்பாட்டு நேரத்திலோ அல்லது நேருக்கு நேர் உரையாடலின் போதோ மொபைலை பயன்படுத்தும் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகின்றன. அதுபோன்று, உடன் இருக்கும் போது தொடர்ந்து மொபைல்களை பயன்படுத்துவதால் அதிக பிரச்சனைகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் வைரஸ் போன்றவற்றால் பணத்தை இழக்க நேரிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நவீன சாதனங்கள் தம்பதிகளுக்கு பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன, அவை தொடர்ந்து இணைந்திருக்க உதவுவதோடு, அவர்கள் அருகில் இல்லாதபோதும் கூட அவர்களது உறவை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. அதேசமயம் அவர்கள் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தும்போது வாதங்களை ஏற்படுத்துகின்றன. எனவே அவற்றை தேவைப்படும்போதும், சரியான முறையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுதான் உறவுகளிடையே விரிசலை ஏற்படுத்தாது. அதே போன்று சரியாக பயன்படுத்தும்போது முகநூல் கணக்குகள் மற்றும் ஆன்லைன் நடவடிக்கைகளில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என்று காஸ்பர்ஸ்கை ஆய்வகத்தின் மார்கெட்டிங் துறை துணைத் தலைவர் டிமிட்ரி அலீஷின் கூறியுள்ளார்.