யாழில் சிறுபோக வெங்காயச் செய்கையில் விவசாயிகள் மும்முரம் (Video)

533

யாழ். வலிகாமம் பிரதேசத்தில் பரவலாகச் சிறு போக வெங்காயச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். வலிகாமம் பிரதேசத்தில் குப்பிளான்,ஏழாலை,புன்னாலைக்கட்டுவன், மயிலங்காடு, ஈவினை, வசாவிளான், குரும்பசிட்டி,சுன்னாகம், மல்லாகம் மருதனார்மடம், ஊரெழு, உரும்பிராய், கோண்டாவில், கோப்பாய், இருபாலை, நீர்வேலி, சிறுப்பிட்டி, அச்செழு, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாகச் சிறு போக வெங்காயச் செய்கை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

வெங்காயச் செய்கைக்குத் தேவையான விதை வெங்காயங்களை வடமராட்சியின் பருத்தித்துறை, கொம்மாந்துறை, தம்பசிட்டி, திக்கம், வதிரி, மந்திகை,இடைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெற்று நடுகை செய்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் வெள்ள அழிவுகள் காரணமாக ஒரு அந்தர் விதை வெங்காயம் 15 ஆயிரம் ரூபா முதல் 20 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட போதும் இந்த வருடம் 8500 ரூபா முதல் 10 ஆயிரம் ரூபா வரை கொள்வனவு செய்யக் கூடியதாகவுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சிறு போக வெங்காயச் செய்கை மூலம் இரண்டரை மாதங்களில் தம்மால் பயன் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்.குடாநாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பம் வெங்காயச் செய்கைக்கு உகந்த காலநிலை அல்லவெனவும் விவசாயிகள் சுட்டிக் காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(‘jaffna vision’ செய்திகளுக்காக செ-ரவிசாந்-)