நெடுநேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்தால் என்ன ஆகும்?

346

உடல் எடைபோடும், வேறுபல பிரச்னைகள் வரும், இது எல்லாருக்கும் தெரியுமே! ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு புதுத் தகவலைக் கண்டறிந்திருக்கிறது சமீபத்திய ஆராய்ச்சியொன்று: நெடுநேரம் உட்கார்ந்து வேலை பார்க்கிறவர்களின் மூளையில் குறிப்பிட்ட சில பகுதிகள் மெலிந்துவிடுகின்றன. அதனால் அவர்களுடைய நினைவுத்திறனும் கற்கும் ஆற்றலும் பாதிக்கப்படலாம்.

UCLAவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நிகழ்த்தியுள்ள இந்த ஆராய்ச்சியில், தினமும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்கிறவர்களுடைய மூளையிலுள்ள Temporal Lobe பகுதி, அதிகம் எழுந்து நடமாடுகிறவர்களுடைய மூளையைவிட அதிகம் மெலிந்திருப்பது தெரியவந்துள்ளது. சரியாகச் சொல்வதென்றால், ஒருவர் 1 மணிநேரம் அதிகம் உட்கார்ந்து வேலைசெய்கிறார் என்றால், இந்தப் பகுதி சுமார் 2% மெலிந்துவிடுகிறதாம். 5 மணிநேரம் என்றால் 10%. மூளையைப் பொறுத்தவரை இந்த வித்தியாசம் மிக அதிகமானது, பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கக்கூடியது.

உட்கார்ந்துகொண்டேயிருந்தால் பாதிக்கப்படப்போவது உடல்மட்டுமல்ல, மூளையும்தான். உங்கள் வேலை எதுவானாலும் சரி, அடிக்கடி எழுந்து நடமாடும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளுங்கள், அதனால் உடலும் மெலியும், மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும்!