குப்பிளானில் சிறப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரார்த்தனை (Video)

355

இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளரும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவ.மகாலிங்கம் எழுதிய “நற்சிந்தனை மலர்” நூலின் வெளியீட்டு விழா யாழ். குப்பிளான் தெற்குச் சிவபூமி ஞான ஆச்சிரம மண்டபத்தில் வியாழக்கிழமை(10) முற்பகல்-10 மணி முதல் இடம்பெற்றது.

நூலாசிரியர் தலைமையில் இடம்பெற்ற விழாவில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி- ஆறு.திருமுருகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வெளியீட்டுரையாற்றி நற்சிந்தனை மலரை வெளியிட்டு வைத்தார்.

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பிரதி அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி ச. லலீசன் நூலின் ஆய்வுரையை நிகழ்த்தினார். வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகரும், சைவப்புலவருமான கந்த சத்தியதாசனின் சிறப்புரையும் இடம்பெற்றது.

உரையாற்றிய அனைவரும் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் ஆற்றிவரும் சைவத்தமிழ்ப் பணிகளை மெச்சிப் பேசியதுடன் “நற்சிந்தனை மலர்” நூலில் உள்ளடக்கியுள்ள சிவத்தமிழ் வித்தகர் எழுதியுள்ள அனைத்துக் கட்டுரைகளும் சமூகத்திற்குச் செய்தி சொல்லும் காத்திரமான கட்டுரைகள் எனவும் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பழமை வாய்ந்த இந்துசாதனம் பத்திரிகையில் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் எழுதிய 16 பயனுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

“கிளார்க்கர்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட உயர்ந்த சேவையாளர் சிவசுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதிகளின் நினைவாக சிவசுப்பிரமணியத்தின் வருடாந்த நினைவு நாளில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அன்னாரது புத்திரரும், கனடா இந்துசமயப் பேரவையின் செயலாளருமான சிவ. முத்துலிங்கம் நூலாக்கத்திற்கான முழு நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

முன்னதாக காலை-09 மணி முதல் யாழ். ஊரெழுவைச் சேர்ந்த மூத்த இசைச் சொற்பொழிவாளரும், ஓய்வுநிலை அதிபருமான கவிமணி க. ஆனந்தராசா(அன்னைதாஸன்) தலைமையில் விசேட கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.

சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வில் அனைத்துத் தெய்வங்களினதும் பாடல்கள் பக்தி ததும்பப் பண்ணுடன் ஓதப்பட்டன. கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வு ஆச்சிரமச் சூழலில் ஆன்மீக அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விசேட கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்ட கவிமணி க. ஆனந்தராசா,மூத்த ஆன்மீகவாதி சிவதொண்டன் நா. முருகையா, வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகரும், சைவப்புலவருமான கந்த சத்தியதாசன் உள்ளிட்ட பெரியோர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கலாநிதி ஆறு. திருமுருகனால் பொன்னாடை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டனர்.

அத்துடன் குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் பொறுப்பாளராகவுள்ள எஸ். சிறிதரன் இந்த விழாவில் விசேடமாகக் கெளரவிக்கப்பட்டார்.

நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் “நற்சிந்தனை மலர்” நூலின் பிரதிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஆச்சிரமத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்கப் பெருமானுக்கும், நாயன்மார்கள் மற்றும் ஈழத்து, இந்தியச் சித்தர்களின் திருவுருவப் படங்களுக்கும் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவரிற்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

(எஸ்.ரவி-)