அந்த முதலாம் நாள்…!

அந்த முதலாம் நாள்
ஆளுக்கொரு திசையிலிருந்து
நீதி கோரி
சாத்வீக பயணம்…!

(கச்)சேரியில் கூடி
உறக்கம் தொலைத்து
உணர்வுகள் மோதி
அலை கடலென திரண்டோம்…!

ஆணுக்கு இங்கே பெண்ணும் நிகரென
பட்டினி கிடந்தும்
பனியில் உறைந்தும்
வேள்வி செய்தோம்…!

பந்தலமைத்தோம்
பச்சை தண்ணீரை ஆகாரமாக்கினோம்
பிச்சையேந்தவில்லை
தொழில் உரிமை வேண்டினோம்….!

எண் புறமும் செய்தி
பறந்தது
சமூக வலைத்தளம் பற்றி
எரிந்தது
நம் மரபணுவில் கலந்திட்ட வீரத்துடன்
சோரம் போகாது
சோர்வடையாது
பல் தூரம் சென்றோம்….

அடிவருடிகள்
நெஞ்சில் காரம் தந்தார்கள்
இரு கரம் நீட்டி அரவணைத்தோம்
எம் கதை சொன்னோம்
கண்ணீரோடு சென்றார்கள்….!!!

புழுதியடித்து
பஸ் பறந்தது
இரைச்சல் இம்சையானது
அகிம்சையே ஆயுதமானது…!

(கச்)சேரி மதகில் கால்களை முட்டுக் கொடுத்து
கழிவுகளோடும் கான்களை தலையணையாக்கி
இலட்சிய கனவுடன்
புது இலக்கியம் தொகுத்தோம்….!

சமூக ஆர்வலர்கள் வந்தார்கள்
சில அரசியல் பேர்வழிகளும் வந்தார்கள்
ஆளுக்கொரு கதை
நமக்கு நாளுக்கொரு கதையானது…!

இது முதலாம் நாள் கதை
முலாமிடப்படாத கதை
கலாம் கண்டஇளைஞர்களின் கதை
சலாம் போடாததால் வந்த கதை…!

ஒரு வருட கதையைச் சொன்னால்
காதுகள் கூட
கலகம் கொள்ள
வீரத் திலகம் இடும்….!!!!

{கவியாக்கம்:-வட்டுக்கோட்டை நவா(பட்டதாரி மாணவன்)}

{27.02.2017 அன்று வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர நியமனம் கோரி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் காலவரையற்ற போராட்டத்தை ஆரம்பித்தார்கள். ஆறு வருடமாகத் தொழில் உரிமை மறுக்கப்பட்ட பட்டதாரிகள் 143 நாட்கள் இரவு பகலாக தொடர்ச்சியாக யாழ் மாவட்ட செயலகம் முன் போராடினார்கள். அந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் முதல் நாளை மையப்படுத்தியதாக “அந்த முதலாம் நாள் ” எனும் இந்தக் கவிதை பட்டதாரி மாணவரொருவரினால் வலியுடன் பிரசவிக்கப்பட்டுள்ளது}