சிவப்பு நிலா: இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சந்திரகிரகணம் இன்று

535

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணமாக இது அமைகிறது. உலகிலேயே இந்த நூற்றாண்டில் உருவானதில் இதுதான் நீளமான சந்திர கிரகணம் ஆகும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதே சந்திர கிரகணம் ஆகும். மூன்றும் நேர்கோட்டில் இருக்கும் இந்த நிகழ்வு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று ஏற்பட உள்ளது.

அதாவது சூரியன், நிலவு, பூமி மூன்றும் நீண்ட நேரம் ஒரே நேர்கோட்டில் இருக்க போகிறது. சுமார் 103 நிமிடங்கள் தொடர்ந்து ஒரே நேர்கோட்டில் இருக்கும். இதனால் சந்திர கிரகணம் மிக நீண்டதாக இருக்கும். இதனை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும்.

100 ஆண்டுகளில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (27) இடம்பெறவுள்ளதாக, கொழும்பு பல்கலைகழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாக இது அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த முழுமையான சந்திர கிரகணம் 27 ஆம் திகதி இரவு முதல் 28 ஆம் திகதி அதிகாலை வரை சுமார் 06 மணி நேரங்களும் 14 நிமிடங்களும் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இரவு 10.45 மணியளவில் இருந்து, மறுநாள் அதிகாலை வரை சந்திர கிரகணம் இடம்பெறும்.

இந்த சந்திர கிரகணத்தின் பின்னர் இலங்கையருக்கு 2025 ஆம் வரையில் இது போன்ற சந்திர கிரகணத்தை பார்பதற்கான வாய்ப்பு கிடைக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.