வலைவீட்டில் வெற்றிகரமான மரக்கறி பயிர்ச்செய்கை!- சாதிக்கும் கிளிநொச்சி விவசாயி

1174

மாறிவரும் காலநிலையை வெற்றிகொண்டு கடந்த 6 மாத காலப்பகுதியில் 3 தடவைகள் வலைவீட்டில் (Net house farming) வெற்றிகரமாக மரக்கறிப் பயிர்ச்செய்கையை செய்து கிளிநொச்சி செல்வா நகரை சேர்ந்த இராஜகோபால் என்கிற விவசாயி சாதித்துள்ளார்.

வலைவீட்டில் சின்ன வெங்காயம், கீரை, பூக்கோவா ஆகியவற்றை வெற்றிகரமாக பயிரிட்டு அறுவடை செய்துள்ளார்.

கடந்த 16.08.2018 அன்று யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு தொகுதி விவசாயிகள் வலைவீட்டில் வெற்றிகரமான மரக்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் குறித்த கிளிநொச்சி விவசாயியின் தோட்டத்துக்கு களப்பயணம் சென்றிருந்தனர். இதற்கான பயண ஏற்பாடுகளை UNDP நிறுவனம் செய்திருந்தது.

முதலில் குறித்த விவசாயியின் வீட்டில் கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் விவசாயிகளுக்கான சிறிய கருத்தமர்வு இடம்பெற்றது. ஓய்வுநிலை உதவி விவசாய பணிப்பாளரும், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் விவசாய ஆலோசகருமான ச. சிவநேசன் தலைமையில் கருத்தமர்வு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் வளவளராக கலந்து கொண்ட ஆர். சஞ்சீபன் குறித்த விவசாயி தொடர்பிலும் வலை வீடு தொடர்பிலும் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

இவரை முன்னோடி விவசாயி என நாம் ஏன் அழைக்கின்றோம் என்றால், கடந்த பல தசாப்த காலங்களாக விவசாயத் துறையில் வெற்றிகரமாக சாதித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு இலங்கையில் விவசாயத்தில் மூன்றாம் இடத்துக்கான NAC விருதினையும், ஜனாதிபதி விருதினையும் பெற்றுள்ளார். இவ்வருடம் NAC இரண்டாம் இடத்துக்கான விருதினையும் பெற்று சாதித்துள்ளார்.

ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் தனது குடும்ப உறுப்பினர்களை மாத்திரம் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றார். நீர் பற்றாக்குறை காரணமாக தற்போது 3 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே விவசாயம் செய்து வருகிறார். அவர் தனியே வலைவீட்டில் மட்டுமல்லாது அதற்கு வெளியிலும் சாதாரண முறையில் பல்வேறு மரக்கறிப் பயிர்களையும் பயிரிட்டுள்ளார்.

இவர் வலைவீட்டில் பிரதானமாக முதலில் கீரையை பயிரிட்டுள்ளார். ஒரு சதுர மீற்றரில் நான்கைந்து பிடிகளைப் பெற்றுள்ளார். 120 சதுர மீற்றரில் மொத்தமாக நானூறு பிடிகளைப் பெற்றுள்ளார். பிடி ஒன்று 30 ரூபாய் வீதம் 12000 ரூபாயினை 35 நாள்களில் வருமானமாக பெற்றுள்ளார். இதனை நாங்கள் வலைவீட்டுக்கு வெளியில் செய்வதாக இருந்தால் 45 – 50 நாள்கள் வரை செல்லும். அடுத்து வலைவீட்டில் சின்ன வெங்காயம் பயிரிட்டு இருக்கிறார். அதன் மூலம் 50 நாட்களில் 45000 ரூபாய் வருமானமாக பெற்றுள்ளார்.

அடுத்து பூக்கோவாவையும் வெற்றிகரமாக பயிரிட்டு கிலோ 150 படி விற்றுள்ளார். பூக்கோவா இலைகளையும் பிடி 20 ரூபாய் படி சந்தைப்படுத்தியுள்ளார்.

பூக்கோவா முற்றிலும் இயற்கை முறையில் பயிரிட்டு இருந்தமை சிறப்பம்சமாகும். இதனை விட கறிமிளகாயும் சிறிய அளவில் பயிரிட்டிருந்தார். இவர் வலைவீட்டுக்கு வெளியே குறைந்தளவு இரசாயனங்களை பயன்படுத்தி மிளகாய், கறிமிளகாய், பயிற்றை, புடோல், வாழை, பாகல் ஆகிய பயிர்களை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெயில் காலங்களில் வழமையான முறையில் மரக்கறிப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதில் நிறைய சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த வலைவீட்டில் மேற்கொள்ளும் போது நுண்நீர்ப்பாசன வசதி செய்யப்பட்டுள்ளதால் வெப்பத்தை குறைத்து, பூச்சி தாக்கத்தையும் குறைத்து வெற்றிகரமாக பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கரவெட்டி, அல்லைப்பிட்டியை சேர்ந்த விவசாயிகளும் வலைவீட்டில் வெற்றிகரமாக கீரைப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வருகிறனர்.

வலைவீட்டில் தக்காளி பயிர்ச்செய்கை வெற்றியை கொடுக்கவில்லை என்பதனை இங்கே பதிவு செய்ய வேண்டும். இதற்கான காரணங்களை கண்டறிந்து நிவர்த்திப்பதில் விவசாயத் திணைக்களம் பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகின்றது.

வலைவீட்டில் வெற்றிகரமாக பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கான அடிப்படைகள்

* பொருத்தமான ஈரப்பதன் (RH) 60 – 80 % இற்குள் இருக்க வேண்டும்.
* பொருத்தமான வெப்பநிலை 18 – 32 பாகை செல்சியசுக்குள் இருக்க வேண்டும்.
* நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.
* நிழல் வலைகளை உபயோகித்து வெப்பத்தையும் சூரிய ஒளியையும் கட்டுப்படுத்த முடியும்.
* தேவையான போது பொலித்தீனால் கூரையை மூடுவதனால் மழையில் இருந்து பாதுகாக்க முடியும்.

வலைவீட்டில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் போது இவ்வருடம் கூடிய பின்னடைவு ஏற்பட்டமைக்கு பிரதான காரணம், ஏப்பிரல் மாதம் எதிர்பார்க்காத அளவுக்கு வெப்பநிலையில் உயர்ச்சி காணப்பட்டது.

திறந்தவெளியில் வெப்பநிலை சராசரியாக 39 பாகை வரைக்கும் சென்று விட்டது. சாதாரணமாக 32 , 33 ஐ மிஞ்சி போவதில்லை. வலைவீட்டுக்குள் வெப்பநிலை 40 பாகை வரை காணப்பட்டது.

வலை வீட்டுக்குள் தண்ணீரை ஸ்பீரே பண்ணும் போது இருந்த வெப்பநிலையை விட 8 – 10 பாகை செல்சியஸ் வெப்பநிலை குறைந்ததை அவதானிக்க முடிந்தது.

வலைவீட்டில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதில் உள்ள சவால்களாக, எதிர்பாராத காலநிலைமையும், சரியான பயனாளிகளை தெரிவு செய்யாமை, சரியான ஆர்வமின்மை, புதிய தொழிநுட்பம், அறிவுறுத்தல்களை சரிவர கேட்டு பின்பற்றாமை ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.

இத்தகைய வலைவீட்டு தொகுதிகளை நிர்மாணித்து, தொடர்ச்சியாக கண்காணிக்கும் பணியினை Uthayan Micro Irrigation & Agro Services நிறுவனத்தினர் மேற்கொண்டிருந்தனர். இந்த வலைவீடுகளை வடக்கில் 20 விவசாயிகளுக்கு UNDP நிறுவனம் செய்து கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.