வரலாற்றுச் சாதனை படைத்தது மூளாய் விக்டோறி அணி (Photos)

97

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாதனையை அல்லது அவர்களது இலக்கை எட்டுவதற்கு எதிர்கொள்ளும் சவால்களும் சோதனைகளும் சொல்லில் அடங்காது. அவற்றைத் தாண்டிய ஒவ்வொன்றும் வரலாற்றில் சாதனையாக இடம்பிடித்தது தான் உண்மை.

அந்தவகையில் மூளாய் விக்டோறி விளையாட்டுக் கழகம் தனது அயராத உழைப்பும், மன உறுதியுடன் கூடிய தன்னம்பிக்கையாலும் இன்று அகில இலங்கை கிரிக்கெற் தரப்படுத்தல் போட்டியில் தனது வரலாற்றுப் பதிவை நிகழ்த்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் இவ்வாண்டுக்கான பிராந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெற் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. குறித்த தொடரின் யாழ். மாவட்டம் பிரிவு -III இற்குள் உள்ளடக்கப்பட்டுத் தொடர் நடைபெற்று வருகின்றது.

யாழ். மாவட்டத்தில் பரவலாக சிறந்த கழங்களுக்கிடையே நடைபெற்று வரும் குறித்த தொடரின் இறுதிக்கட்டம் தற்போது நெருங்கியுள்ள நிலையில் அதன் இறுதிப் போட்டிக்குள் மூளாய் விக்டோறி அணி முதற் தடவையாக நுழைந்துள்ளதுடன் யாழ். நகரப் பகுதியையும் அதனை ஒட்டிய சில இடங்களையும் மையப்படுத்தியிருந்த கடினப்பந்து கிரிக்கெற் போட்டிகளை இதன் மூலம் பிரதேசங்களையும் சென்றடையச் செய்துள்ளது.

அரை இறுதிப் போட்டி கடந்த- 18 ஆம் திகதி சனிக்கிழமையன்று யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது மூளாய் விக்டோறி அணி யாழ்ப்பாணத்தின் மிகப் பலம் வாய்ந்ததும் அனுசரணையாளர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்களை உள்ளடக்கியதான யாழ். ஜொனியன்ஸ் அணியை எதிர்கொண்டு அவர்களது சவாலை முறியடித்து 12 ஓட்டங்களால் வெற்றி பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாவது சுற்றுக்கும் யாழ்.மாவட்டத்தில் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்று சாதித்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய விக்டோறி அணி 39.4 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சரத்குமார் – 47, இன்பராசா- 20, சஜீதரன் – 18, பிரசாந் – 16, பிரசாத் – 10 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் பிரிந்தாபன் – 3, டினேஸ் – 3, அபிநாத் – 2, லவேந்திரா – 2 இலக்குகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்.ஜொனியன்ஸ் அணி 35 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் அபிநாத் – 38, பிருந்தாபன் – 31, அன்புஜன் – 18, சௌமிகன் – 16, தேவப்பிரசாத் – 16 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் பிரதீஸ் – 6, கரியோன் – 3 இலக்குகளை கைப்பற்றினர்.

இப்போட்டியின் மூலம் யாழ்.சென்றல் விளையாட்டுக் கழகம் நடத்தும் தரவரிசை பட்டியலுக்கு விக்டோறி அணி 7.85 புள்ளிகளையும், யாழ்.ஜொனியன்ஸ் அணி 2.61 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த சாதனை வெற்றி குறித்து மூளாய் விக்டோறி அணியின் முக்கியஸ்தரொருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

திறமையானவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பதனை அடிப்படையாக கொண்டே எமது விக்டோறி அணி உருவாக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எமது கழகம் உருவாக்கப்பட்டபோது யாழ். மாவட்டத்தில் மென்பந்து கிரிக்கெற் தொடரின் சவால் மிக்க அணிகளில் ஒன்றாக திகழ்ந்தது. பல கிண்ணங்களையும் சுவீகரித்திருந்தது.

அக்காலத்தில் எமது அணியிலிருந்த அனைத்து வீரர்களும் மென்பந்து போட்டிகளின் அதி திறமை மிக்கவர்களாகவே இருந்தனர். நாளடையில் நாம் எமது கழகத்தின் கிரிக்கெற் விளையாட்டைக் கடினப் பந்துத் தொடரிலும் அவதானம் செலுத்தும் வகையில் வியூகங்களை உருவாக்கினோம். காரணம் பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள் எமது அணியிவல் இருந்தமையால் அது உடனடியாக சாத்தியமானது.

ஆனாலும் அவ்வாறு கடினப்பந்து கிறிக்கெற்றை விளையாடுவதற்கோ அன்றி பயிற்சி மேற்கொள்வதற்கோ எம்மிடம் மைதானம் இருந்திருக்கவில்லை.

எனினும், துணிச்சலுடன் களங்கள் கண்டோம். சாதிக்கத் தொடங்கினோம். உள்ளூர்ப் போட்டிகளில் சாதித்துக் காட்டியும் எமது அணியை துறைசார்ந்தவர்கள் திட்டமிட்ட வகையில் புறந்தள்ளி வந்தார்கள். இவ் விளையாட்டுக்காக எமக்கு வரவேண்டிய உதவிகளையும் தடுத்து வந்தார்கள்.

ஆனாலும், நாம் மனம் தளராது ஒரு சிறிய வளவுக்குள் எமது பயிற்சிகளை மேற்கொண்டு வந்ததுடன் அடிக்கடி கிரிக்கெற் போட்டிகளை இதர கழகங்களுடன் ஏற்படுத்தி அதன் மூலம் எமது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இற்றைவரை நாம் ஒரு சொந்த மைதானம் இல்லாத காரணத்தால் பல சவால்களைச் சந்திக்கவேண்டியுள்ளது. இது தொடர்பில் துறைசார் தரப்பினருடனும், அரசியல் தலைவர்களுடனும், நலன் விரும்பிகளுடனும் கோரிக்கை விடுத்தும் இதற்கான சாதகமான பதிலை இன்றுவரை எவரும் எமக்கு வழங்கவில்வைல என்பதே வேதனையானதாகும்.

ஆனாலும், நாம் எமது வீரர்களின் திறமையையும், தன்னம்பிக்கையையும் மையமாகக் கொண்டு ஒவ்வொரு தடவையும் எதிரணியினரை எதிர்கொண்டு வெற்றிகளையும் சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றோம். அதற்கு எடுத்துக்காட்டாகவும் சாதிக்க வேண்டும் என்ற கனவுக்காகவும், நாம் எதிர்கொண்ட வலிகளுக்கும் மருந்தாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இந் வெற்றி எமது கழகத்தின் அடுத்த கட்டப் பரிணாமத்துக்கான வழிகோலாக அமையுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஆனாலும், சில சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களைப் போல மீண்டும் அமையுமாக இருந்தால்…சிந்திக்கவேண்டியதாக உள்ளது. எதுவானாலும் எம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

(எஸ்.ரவி-)