விளைச்சலைக் கூட்டும் இனக்கவர்ச்சிப் பொறி

387

Fruit Fly என்று சொல்லப்படுகிற இந்தப் பழ ஈக்களுக்கு ‘பாக்ட்ரோசீரா டார்சலிஸ்’(Bactrocera Dorsalis) என்று பெயர். இந்த ஈக்கள், ஓரளவு திரண்ட காய்கள் மேல் உட்கார்ந்து, ஊசி போன்ற தங்களின் மூக்கைக் கொண்டு 1 மில்லி மீட்டரிலிருந்து 4 மில்லி மீட்டர் ஆழம் வரை காய்களைத் துளைத்து, தமது முட்டைகளைச் செலுத்திவிடும். ஒரு ஈ, ஒரு தடவையில் 2 முதல் 15 முட்டைகள் வரை இப்படிச் செலுத்தும்.

ஈக்களால் துளைக்கப்பட்ட இடத்தில், சில நாள்களிலேயே சிறிய கரும்புள்ளிகள் தோன்றும். பழுக்கும் தருணத்தில், காய்க்குள்ளேயே முட்டைகள் பொரிந்து புழுக்கள் வெளிவரும். புழுக்கள் இருந்த பகுதி மட்டும் அழுகத் தொடங்கும். பிறகு காய்கள் உதிர்ந்துவிடும். கீழே விழுந்த காய்களில் உள்ள புழுக்கள் கூட்டுப்புழுவாக மாறி, பிறகு ஈக்களாக உருமாற்றம் பெற்றுவிடும். ஒருவேளை, தாக்குதலுக்குள்ளான காய்கள் அழுகுவதற்கு முன்பாகவே பறிக்கப்பட்டு, பழுக்க வைத்தால், பழத்தினுள்ளேயே அந்தப் புழுக்கள் தங்கிவிடும். கடையில் வாங்கி வரும் மாம்பழங்களுக்குள் நெளியும் புழுக்கள் இவைதான். மா மட்டுமல்லாமல், கொய்யா, சீத்தா, பப்பாளி, முருங்கை, பாகல், புடலை, பீர்க்கன் மற்றும் கொய்யா, மா, கோவைக்காய்…. எனப் பல வகையான பயிர்களையும் இந்த ஈக்கள் தாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த, ரசாயன மருந்துகளைத் தெளிக்கத் தேவையில்லை. இனக்கவர்ச்சிப் பொறிகளே போதுமானவை.

இதற்கான கவர்ச்சிப் பொறிகளில் துளசி உள்ளிட்ட தாவரங்களிலிருந்து பிரிக்கப்படும் ‘மெதில் யூஜினால்’ (Methyl Eugenol) எனப்படும் ஒருவித வாசனைப் பொருளோடு, நச்சும் கலந்து வைக்கப்பட்டிருக்கும். இந்த வாசனையில் ஈர்க்கப்பட்டு வரும் ஆண் ஈக்கள் பொறியில் சிக்கி இறந்து விடுகின்றன. ஆண் பூச்சிகளுடன், பெண் பூச்சிகள் இனச்சேர்க்கை செய்வது தடைப்பட்டுவிடும். இதனால், இனப்பெருக்கம் தடைபட்டு விடுகிறது.

ஒரு ஏக்கருக்கு ஐந்து இடங்களில் இந்தப் பொறிகளை வைக்க வேண்டும். இதில் விழுந்து இறக்கும் பூச்சிகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும். 45 நாள்களுக்கு ஒருமுறை வாசனைப் பொருளை மாற்ற வேண்டும். அருகருகே உள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் பொறிகளை வைக்கும்போது, நல்ல பலன் கிடைக்கும். இந்த இனக்கவர்ச்சிப் பொறியைப் பயன்படுத்துவதால், பழ ஈ கட்டுப்படுத்தப்பட்டு விளைச்சல் அதிகரிக்கப்பதைக் கண்கூடாகக் காணலாம்.

நன்றி – பசுமை விகடன்