தீர்த்தமாடி அருள்புரிவாய் நல்லூர்க் கந்தா!

காலத்தால் அழியா கானமிசைக்கின்றோம் முருகா
கோலக் குறத்தியுடன் வருவாய் குருநாதா!
தீர்த்தமாடும் திருநாளாம் இன்று குமரா
அடியார்கள் ஆயிரமாயிரமாய் குவிகின்றார் ஆலயச் சூழலெல்லாம்

வருவாய் மயிலேறி வள்ளி தெய்வயானையுடன் முருகா
குருவாக வந்து காட்சி தருவாய் குருநாதா
தருவாய் உனதன்பு திருவடி குகநாதா
மருவும் அடியார் மனங்குளிர காட்சி தருவாய் குகனேசா!

நாவலர் போற்றிய நல்லூரின் நாயகா முருகா
காவலர் தானென்றே கவிபாடி மகிழ்ந்திருந்தார்
கல்லாதாரும் உனைக் கவிபாடி அழைக்கின்றார்
நல்லோர் நாவில் நடனமிடும் நாயகா கண் பாரையா!

எத்தனை பிறவியெடுத்தாலும் முருகா- உன்
திருவடி மறவாதிருக்க வரந்தருவாய்
பித்தனைப் போலுனைப் பாட வைப்பாய் முருகா
சித்தத்திலிருந்து சிவஞானம் தந்திடையா!

எல்லோர்க்கும் வரமளிக்கும் ஏகநாயகா
பாலனெனைப் பாட வைப்பாய் பண்டிதா
அருணகிரிக்கு அருள் புரிந்த அருணாசலா முருகா
தருணமிது தீர்த்தமாடி அருள்புரிவாய்..!

கவியாக்கம்:-
கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம்,
(மூத்த ஓதுவார், ஏழாலை)

{வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தீர்த்தத் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(09.09.2018) இடம்பெறுவதை முன்னிட்டு மேற்படி சிறப்புக் கவிதை வெளியாகிறது)