தீபங்கள் சுகம் தரும் தீபாவளி: கவிமணி அன்னைதாஸனின் சிறப்பு இசை சொற்பொழிவு (Video)

309

தீப- ஆவளி என்றாலே தீப வரிசை என்று அர்த்தம். தீபாவளித் திருநாள் ஏழை, எளியவர்களை அரவணைக்கின்ற, வசதி படைத்தவர்கள் வறுமை நிலையிலுள்ளவர்களுக்கு உதவி செய்து ஈகைத் தன்மையை வளர்ப்பதற்காகவும், உயிர்களுக்குப் பாதகம் செய்யாத சாத்வீகமான திருநாளாகவும் நாம் தீபாவளியைக் கொண்டாட வேண்டும். இதன் மூலம் நாங்களும் மகிழ்ந்து, ஏனைய உயிர்களும் மகிழும் படியான சாந்தி, சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் எங்களுடைய முன்னோர்கள் எமக்கு காட்டிய அரும்பெரு விழா தீபாவளிப் பெருநாள் என மூத்த இசை சொற்பொழிவாளரும், ஓய்வு நிலை அதிபருமான கவிமணி க. ஆனந்தராசா(அன்னைதாஸன்) தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை(06-11-2018) உலகளாவிய இந்துமக்களால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எமது ‘Jaffna Vision’ செய்திச் சேவைக்கு வழங்கிய சிறப்பு இசை சொற்பொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என் அன்பானவர்களே!

ஐப்பசி மாதம் பிறந்து விட்டால் சைவமக்களுக்கு காத்துக் கொண்டிருக்கின்ற விழாக்களில் ஒன்று தான் நாங்கள் தற்போது கொண்டாடிக் கொண்டிருக்கின்ற தீபாவளித் திருநாள்.

இந்தத் தீபாவளித் திருநாள் உண்மையிலேயே ஒரு ஆன்மீக நிகழ்வு. இது கேளிக்கை நிகழ்வல்ல. ஆன்மீகமான விரத நிர்ணயத்துடன் இணைந்த விழா தான் தீபாவளி விழா.

அசுரக் குணத்திலுள்ள நரகாசுரன் படையால் மக்கள் வாழ்வாங்கு வாழ முடியாமல் தவிர்த்த வேளையில் அந்த அசுரனைத் திருமால் அழித்த தினமாக தீபாவளி தினத்தைக் கொண்டாடுவதாக ஒரு வரலாறுண்டு. அதுமட்டுமல்லாமல் பாண்டவர் வனவாசம் முடிவடைந்த பின்னர் மீண்டும் வருகை தந்த போது அவர்களை விளக்கேற்றி வரவேற்றதாக மகாபாரத வரலாறு பேசுகின்றது.

அதேபோன்று இராமன் தன்னுடைய துணைவியான சீதையை இராவணன் பிடியிலிருந்து மீட்டு வந்த போது அயோத்தியிலுள்ள மக்களெல்லாம் குதூகலித்து, ஆரவாரம் செய்து விளக்கேற்றி வரவேற்றார்கள் என இராமாயணம் பேசுகின்றது.

ஆகவே, விளக்கேற்றுதல் தான் தீபாவளி . இருளை அகற்றுகின்ற ஒரு விழாவாகவே தீபாவளி அமைகின்றது.

தற்போது நாங்கள் பல்வேறு வழிகளிலும் இருள் சூழ்ந்து போயிருக்கின்றோம். அநேகமாக ஐப்பசி மாதத்து அமாவாசைத் திதியில், திரயோதசியில், சதுர்த்தசியில் பல்வேறு விழாக்கள் நடைபெறுவதாக நீங்கள் பாடநூல்களில் படித்திருப்பீர்கள். பாட நூல்களில் படித்தவற்றை அப்படியே ஒப்புவிப்பது எனது பணியல்ல. நீங்கள் தற்போது எவ்வாறு கொண்டாடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்ற பேதத்தை எடுத்துரைப்பதும் எனது பணியாக அமைந்துள்ளது.

நான் ஒரு கிராமப் புறத்தைச் சார்ந்தவன் என்ற வகையில் எங்கள் கிராமத்தில் அனைவரும் கடா அடித்துத் தான் அன்றைய காலத்தில் தீபாவளி கொண்டாடினார்கள். தற்போதும் பலரும் அப்படித் தான் கொண்டாடிக் கொண்டிருக்கின்றீர்கள்.

நரகாசுரனை வதம் செய்கின்ற போது அவன் உயிரிழக்கும் தறுவாயில் நான் சாகின்ற இந்த நாளை மக்களனைவரும் குதூகலமாகக் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டாராம். இதற்கமைய தற்போது குதூகலிப்புக்கள் எந்த வகைகளிலெல்லாம் நடைபெறுகின்றது என்பதை நீங்கள் உங்கள் கண்கள் ஊடாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

ஆனால்,இவையெல்லாம் எங்கள் சமய நெறிமுறைகளுக்கு உகந்த நெறிமுறையல்ல.

காலத்திற்கேற்ற வகையில் நெகிழ்ந்து போகும் தன்மை யுடையவர்களாகத் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உலகத்தில் பரந்துபட்டு வாழும் தமிழர்கள் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

‘Jaffna Vision’ செய்திச் சேவை இது தொடர்பான பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

ஐப்பசி மாத சதுர்த்தசி அமாவாசை நாளினிலே
ஐப்பசி மாத சதுர்த்தசி அமாவாசை நாளினிலே
தப்பாமல் இன்று மக்கள் தத்தமது இல்லினிலே
அப்பாலும் வாழ்வோரும் அகங் குளிர்ந்து கொண்டாடும்
அப்பாலும் வாழ்வோரும் அகங் குளிர்ந்து கொண்டாடும்
ஒப்பில்லா ஓர் விழா தான் ஒளிமிகு தீபாவளி
ஒப்பில்லா ஓர் விழா தான் ஒளிமிகு தீபாவளி
துப்பில்லாதவர் கூட எப்பாடுபட்டேனும்
இப்பெருவிழாவை இயல்புக்கேற்ற வண்ணம்
சிப்பியோடு சீடை சிறந்த நல் உடுப்பெடுத்து
குப்பத்திலுள்ளோர் கூட குதூகலித்து மகிழ்வர்
குப்பத்திலுள்ளோர் கூட குதூகலித்து மகிழ்வர்

பிறந்தநாளன்று ஒரு குடும்பத்துக்குத் தான் விழா. திருமண விழாவென்றால் ஒரு கிராமத்துக்கு விழா. ஆனால்,தீபாவளி எங்கள் தேசத்தின் விழாவாக விளங்குகின்றது.

எமது மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்து வரும் நிலையில் அவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாட முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. அதுமட்டுமல்ல இன்றைய அரசியல் சூழ்நிலையில் கண்ணீருக்கு மத்தியில் தீபாவளி கொண்டாட வேண்டிய நிலை. இந்தத் தீபாவளி இலங்கையைப் பொறுத்தவரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீபாவளியாக விளங்குகின்றது.

எதிர்வரும்-14 ஆம் திகதி தமிழரின் நிலை என்ன? ஆளும் கட்சியின் நிலை என்ன? என்பதைத் தீர்மானிக்கும் தீபாவளியாக இந்தத் தீபாவளி கருதப்படுகின்றது.

ஹலோ என்று சொன்னால் கிலோவில் பணம் வருகின்றது. சீடை, பலகாரங்கள் அனைத்தும் விலை கொடுத்து வாங்குகின்றோம். ஆனால், நிம்மதி மட்டுமில்லை.

தமிழர்களுடைய கடந்த கால இடப்பெயர்வுகளை நீங்கள் எடுத்து நோக்கினால் தீபாவளியை அண்டிய காலப் பகுதியில் இராணுவத்தினர் எங்களை நோக்கி வருவார்கள். ஒரு தீபாவளியை என்னால் மறக்க முடியாது. ஒரு தடவை பலாலியிருந்து இராணுவத்தினர் முன்னோக்கி நகர்ந்த போது ஏழாலை, குப்பிளான், குரும்பசிட்டி மக்களெல்லாம் இடம்பெயர்ந்தார்கள்.

இந்தச் சம்பவம் ஒரு தீபாவாளிக்கு முதல்நாள் இடம்பெற்ற சம்பவமாகும். இந்த நாளை மறக்க முடியாமல் நான் உருகிப் பாடிய பாடலைத் தான் இங்கும் உங்களுக்குச் சமர்ப்பித்தேன்.

எல்லோரும் இன்றைய தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். ஆனால், எங்கள் இனத்தின் சோகத்தையும் நீங்கள் மறந்து விடாதீர்கள்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. புலம்பெயர் தேசங்களிலும் கொண்டாடப்படுகின்றது.

ஆனால், தைப்பொங்கல் விழாவாக இருந்தாலென்ன, தீபாவளி விழாவாக இருந்தாலென்ன தற்போது புதுக் கோலம் எடுத்திருப்பது உண்மை. இவ்வாறான எங்களுடைய விழாக்களின் மூலகாரணம் மாறி தேசிய விழாக்களாக மாறுகின்றன. காலத்திற்கேற்ப மாற வேண்டியது யதார்த்தமாகவிருந்தாலும் விழாக்களின் மூலகாரணத்தை நாம் பின்பற்ற வேண்டியதும் அவசியம்.

ஆகவே, எங்கள் வீடுகளில், ஆலயங்களில் விளக்குகள் ஏற்றி எங்கள் புற இருளை மாத்திரமல்லாமல் அகவிருளையும் அகற்றி நாமனைவரும் வாழ்வாங்கு வாழ்வோம். உலகெங்கும் பரந்து வாழும் ‘Jaffna Vision’ நேயர்களுக்கு மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகின்றேன். வாழ்க….வளர்க…நன்றி, வணக்கம்.

இதேவேளை, தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு மூத்த இசை சொற்பொழிவாளரும், ஓய்வு நிலை அதிபருமான கவிமணி க. ஆனந்தராசா(அன்னைதாஸன்) எமது செய்திச் சேவைக்கு வழங்கிய இசை சொற்பொழிவின் முழுமையான பகுதியை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் முழுமையாக கண்டு, கேட்டு இன்புறலாம்.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- செ- ரவிசாந்-}