யாழில் பக்திபூர்வமாக இடம்பெற்ற கேதார கெளரி விரத காப்புக் கட்டும் நிகழ்வு (Photos)

235

யாழ்.குடாநாட்டிலுள்ள ஆலயங்களில் இன்று புதன்கிழமை(06) சிவ விரதங்களில் முக்கியமானதாக விளங்கும் கேதார கெளரிவிரத பூஜையின் இறுதிநாளான காப்புக் கட்டும் வைபவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள சிவன்,சக்தி ஆலயங்களிலும், ஏனைய ஆலயங்களிலும் கேதார கெளரி விரத பூஜை காப்புக் கட்டும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் கீரிமலை நகுலேஸ்வரர் சிவன் ஆலயம், வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயம், சுன்னாகம் கதிரமலைச் சிவன் ஆலயம், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் உள்ளிட்ட ஆலயங்களில் கேதார கெளரி விரத பூஜையின் காப்புக் கட்டும் வைபவத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பிரசித்தி பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் வருடாந்தக் கேதார கெளரி விரத பூஜையின் இறுதிநாள் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது.

20 நாட்களுக்குள் நட்சத்திரத் திதி வந்து போகின்ற காரணத்தால் இறுதிநாளான இன்று இரண்டு நாட்களிற்குரிய பூசை வழிபாடுகள் இவ்வாலயத்தில் இடம்பெற்றன.

இன்று காலை-08 மணிக்கு காலைச் சந்திப் பூஜையைத் தொடர்ந்து கேதார கெளரி விரத பூஜை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து முற்பகல்-11 மணிக்கு இடம்பெற்ற பூஜையுடன் இரண்டாவது பூஜை நிறைவுபெற்று தொடர்ந்து கெளரிக் காப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கெளரி விரத காலப் பகுதி முழுவதும் பூஜை வழிபாடுகளில் வைக்கப்பட்டிருந்த 21 இழைகளாலான கெளரிக் காப்பு அடியவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாலயத்தில் இவ்வருடம் 3500 இற்கும் மேற்பட்டஅடியவர்கள் கலந்து கொண்டு கெளரிக் காப்புப் பெற்றுச் சென்றனர்.

இதேவேளை, யாழ்.குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற கேதார கெளரி விரத விரத பூஜையிலும் பல நூற்றுக்கணக்கான பெண், ஆண் அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டனர். இதன்போது லிங்கேஸ்வரர் சமேத கெளரியம்பாள் உள்வீதி, வெளிவீதி எழுந்தருளி வலம் வந்து அருள்பாலித்தனர்.

வீதி வலம் வரும் வேளையில் பெண் அடியவர்கள் பலரும் கற்பூரச் சட்டிகள் ஏந்தி நேர்த்திக் கடனை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.

ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் இன்றைய கிரியை வழிபாடுகளைச் சிறப்பாக நடாத்தி வைத்ததுடன் கெளரிக் காப்புக் கட்டும் வைபவமும் இனிதே நடந்தேறியது.

{செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்-}