யாழில் பிரதேச செயலகத்திற்குள் நுழைந்து ஊழியரை கடித்த குடும்பஸ்தர்!

281

யாழ்.கரவெட்டிப் பிரதேச செயலகத்திற்கு வந்த குடும்பஸ்தரொருவர் அங்கிருந்த ஊழியரொருவரின் கைவிரலைக் கடித்துப் படுகாயப்படுத்தியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(07-11-2018) இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தர் பிறப்பு அத்தாட்சிப் பெறும் பகுதிக்குச் சென்று அங்கிருந்தவர்களுடன் முரண்பட்டுள்ளார்.முரண்பாட்டின் உச்சக் கட்டமாக அங்கு நின்ற ஊழியரொருவரின் கைவிரலைக் கடித்ததுடன் அவர் மீது தாக்குதலும் மேற்கொண்டார்.

குறித்த சம்பவத்தால் பிரதேச செயலகத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் ஊழியரைக் கடித்த குடும்பஸ்தரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த ஊழியர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.

(தமிழின் தோழன்-)