யாழ். உரும்பிராயில் வறுமை சிறுவர்கள் மகிழ்வுடன் கொண்டாடிய தீபாவளி (Videos)

243

வடபிராந்திய சத்தியசாயி நிறுவனத்தினர் யாழ். உரும்பிராய் தெற்கு செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பொதுமக்களுடன் இணைந்து தீபாவளித் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடினர்.

இதற்கான நிகழ்வு தீபாவளித் திருநாளான செவ்வாய்க்கிழமை(06-11-2018)பிற்பகல்-04.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

உரும்பிராய் தெற்கு செல்வபுரம் உதயசூரியன் முன்பள்ளியிலிருந்து சிறுவர், சிறுமிகள் தமது கைகளில் தீபங்கள் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

“அனைவரிலும் அன்பாயிரு அனைவருக்கும் சேவை செய்” எனும் தொனிப் பொருளில் மேற்படி ஊர்வல பவனி முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வடபிராந்திய சத்திய சாயி நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்ட மண்டபம் மேற்படி பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் பயன்பாட்டிற்கெனக் கையளிக்கப்பட்டது.

மிகவும் பின்தங்கிய பிரதேசமான உரும்பிராய் தெற்கு செல்வபுரம் பகுதியில் வடபிராந்திய சத்தியசாயி நிறுவனம் வெள்ளி தோறும் அப் பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகளுக்காக மனித மேம்பாட்டுக் கல்வி வகுப்புக்களைத் தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றது.

மனித மேம்பாட்டுக் கல்வி வகுப்புக்களைத் தொடர்ச்சியாக நடாத்தி குறித்த பகுதியில் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் செயற்பட்டு வரும் வடபிராந்திய சத்திய சாயி நிறுவனம் இதன் ஒரு கட்டமாகவே புதிய மண்டபமொன்றை நிர்மாணித்துள்ளது.

இந்த நிகழ்வில் ஸ்ரீசத்தியசாயி பகவானின் உருவப்படம் வைக்கப்பட்டு விசேட பஜனை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சிறுவர், சிறுமிகளின் பல்வேறு கண்கவர் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேற்படி நிகழ்வில் வடபிராந்திய சத்தியசாயி நிறுவனத்தின் தலைவர் கே.வி. சிவனேசன், கிராம அலுவலகர், வடபிராந்திய சத்தியசாயி நிறுவனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஆசிரியர்களான ச.தயாபரி, ஜெகதீஸ்வரன் ஜெனிற்றா, கிராம மக்கள் என நூற்றுக் கணக்கானார் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்,சிறுமிகள் வடபிராந்திய சத்திய சாயி நிறுவனத்தினரால் தீபாவளிப் பரிசாக வழங்கப்பட்ட புத்தாடைகளை அணிந்து கலந்து கொண்டதுடன், நிகழ்வின் இறுதியிலும் தீபாவளிப் பரிசாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கலும் பரிமாறப்பட்டன.

மொத்தத்தில் வறுமை நிலையிலுள்ள மேற்படி பகுதி சிறுவர், சிறுமிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு வடபிராந்திய சத்திய சாயி நிறுவனம் வழியேற்படுத்தியமை வரவேற்புக்குரியது.

வடபிராந்திய சத்தியசாயி நிறுவனம் உரும்பிராய் செல்வபுரம் கிராம மக்களின் நிலையைக் கருத்திற் கொண்டு ஏற்கனவே வறிய நிலையிலுள்ள குடும்பமொன்றுக்குப் புதிதாக வீடொன்று அமைத்துக் கொடுத்துள்ளதுடன் பல குடும்பங்களுக்கு குழாய்க் கிணறுகளும் அமைத்து வழங்கியுள்ளது.

அது மாத்திரமன்றி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகளின் கற்றலுக்குத் தேவையான ஊக்குவிப்புக்களையும் வழங்கியுள்ளது.

“ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பது முதுமொழி. செல்வந்த, நடுத்தரக் குடும்பங்கள் பண்டிகளைக் கொண்டாடுகின்ற போது பின்தங்கிய நிலையிலுள்ள குடும்பங்கள் அதனைப் பார்த்து ஏங்கும் நிலை மாற்றப்பட வேண்டும்.

இவ்வாறான புனித பண்டிகை காலங்களில் இல்லாதவர்களுக்கு உதவி செய்வதால் கிடைக்கும் ஆத்ம திருப்திக்கு எல்லையில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}