அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம்! (Photos)

53

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம்(07) பிற்பகல் சந்தித்து விட்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹஜ் யாத்திரைக்காக மக்காவுக்கு ஒன்றாகப் புறப்பட்டுச் சென்றமை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் பிற்பகல்-06 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பது குறித்து இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலை முடித்துக் கொண்டு ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் இரவு- 10 மணிக்கு மக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதன் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையில் நேற்று(08)அதிகாலை-02 மணியளவில் மக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

எதிர்வரும்- 13ஆம் திகதி இவர்கள் ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு நாடு திரும்புவரென எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும்-14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் மேற்படி விஜயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.