வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்: விஞ்ஞானிகள் சாதனை! (Vidio)

இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் இன்று புதன்கிழமை(14) பிற்பகல் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உயர் தொழில்நுட்பத்தில் ஜிசாட் -29 எனும் செயற்கைக் கோளைத் தயாரித்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் இன்று பிற்பகல்-05.08 மணியளவில் ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து ஜிஎஸ்எல்வி மாக்- 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டானது மூன்று நிலைகளைக் கொண்ட கனரக வகையைச் சேர்ந்தது.

இந்த மூன்று நிலைகள் முறையே திட எரிபொருள், திரவ எரிபொருள், கிரையோஜெனிக் என்ஜின் கொண்டதாகவும், சுமார்- 10 டன் எடை கொண்ட பொருளைத் தூக்கிச் செல்லும் திறன் கொண்டது.

இந்நிலையில் இன்று பிற்பகல்-05.08 மணிக்கு சரியாக ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. அடுத்த சில நிமிடங்களிலிலேயே முதற்கட்ட இலக்குத் தொலைவை ஜிஎஸ்எல்வி ராக்கெட் எட்டியது.

பின்னர் சுமார் 18 நிமிடங்களுக்குப் பின்னர் ஜிசாட்-29 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

ஜிசாட்- 29 செயற்கைக் கோளானது மொத்தம் நான்கு டன் எடை கொண்டது. பூமியிலிருந்து சுமார்- 36,0000 கிலோ மீற்றர் தொலைவில் விண்ணில் நிலை நிறுத்தத் திட்டமிடப்பட்டது.

இருப்பினும் தற்போது கஜா புயலின் காரணமாக ராக்கெட் ஏவும் நேரம் தள்ளி வைக்கப்படவும் வாய்ப்புள்ளதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் ராக்கெட் ஏவுதலில் எவ்வித நேர மாற்றமும் செய்யப்படவில்லை.

இதேவேளை, ஜிசாட்-29 செயற்கைக் கோளானது தகவல் தொடர்புத் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லுமென எதிர்பார்க்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.