யாழ். இணுவிலில் பிரபல எழுத்தாளர் சிதம்பர திருச்செந்திநாதனின் நினைவுப் பகிர்வு (Videos)

289

இணுவில் கலை இலக்கிய வட்டமும் எழு கலை இலக்கியப் பேரவையும் இணைந்து ஈழத்தின் பிரபல எழுத்தாளரும், ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனின் மறைவையொட்டிய நினைவுப் பகிர்வு நிகழ்வொன்றை இன்று சனிக்கிழமை(17-11-2018) பிற்பகல்-03.30 மணி முதல் யாழ்.இணுவிலுள்ள அறிவாலய மண்டபத்தில் ஏற்பாடு செய்து நடாத்தியது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மறைந்த எழுத்தாளரின் உருவப்படம் வைக்கப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கவிஞர் நாக.சிவசிதம்பரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் க. தேவராஜா, பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் வ.மகேஸ்வரன், மூத்த சட்டத்தரணி சோ.தேவராஜா, இணுவில் கலை இலக்கிய வட்டத்தின் முன்னாள் தலைவர் இணுவை துரை எங்கரசு, எழுத்தாளர்களான நா. யோகேந்திரநாதன், கை.சரவணன், ந. மயூரரூபன், இணுவில் கலை இலக்கிய வட்ட உறுப்பினர் ந.ஞானசூரியர் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்தினர்.

இதேவேளை,மேற்படி நினைவுப் பகிர்வு நிகழ்வில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், ஈழத்தின் மூத்த கவிஞர் சோ.பத்மநாதன், பத்தி எழுத்தாளர் கணபதி சர்வானந்தன், எழுத்தாளர் இரா.ஜெயக்குமார் மற்றும் மறைந்த எழுத்தாளரது குடும்பத்தவர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளிகள்:- செ.ரவிசாந்-}