கூட்டரசால் கைவிடப்பட்டுள்ளோம்!: செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் விசேட செவ்வி (Video)

236

இந்த நாட்டில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு மைத்திரிபால-ரணில் விக்கிரமசிங்க கூட்டரசாங்கம் தீர்வு வழங்குமெனத் தமிழ்த்தலைவர்கள், தமிழ்மக்கள் நம்பியதுடன் மாத்திரமல்லாமல் உலக அரங்கிலும் நம்பப்பட்டது. ஆனால், தற்போது இவையனைத்தும் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை இதுவரை அதிகாரத்திலிருந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். இது மிகவும் கவலையானதொரு விடயம். பல இலட்சம் தமிழர்கள் போரில் இறந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் அவயவங்களை இழந்துள்ளனர். எத்தனையோ பேர் ஆதரவற்ற நிலையிலும், தவித்த நிலையிலும் இன்னும் தென்னிலங்கை அரசை நம்பி ஏதோ தீர்வைத் தரப் போகின்றார்களெனக் காத்திருந்த நிலையில் கைவிடப்பட்டிருக்கின்றோம் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் கடும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த பல நாட்களாக நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் தொடர்பில் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையினுடைய இன்றைய அரசியல் சூழலில் அரசியல் தலைவர்களிடையே மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றது. மிகவும் மன வேதனையுடன் காணப்படும் தமிழ்ச் சமூகம் இதனால் ஏக்கத்திலிருக்கின்றது. கூட்டரசாங்கம் தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள்.

ஒரு தேசிய அரசு போல அனைவரும் இணைந்து ஒரு அரசாங்கம் உருவாகியிருக்கின்றதென நம்பியவர்கள் தமிழ்மக்கள். தமிழ்மக்களுடைய வாக்கு வன்மையால் ஆட்சி அதிகாரத்திலிருக்கின்ற வாய்ப்புப் பெற்ற ஜனாதிபதி முதலான அரசாங்கம் தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எங்களுக்கு முதல் வேலை என்று கூறியவர்கள் தற்போது எந்தவிதத்திலும் எங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் ஆட்சியதிகாரம் அனைத்தும் குழம்பிய நிலை கண்டு மனம் வருந்துகின்றோம்.

தமிழ்மக்களைப் பொறுத்தவரை தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

சிங்களத் தலைவர்களைப் பொறுத்தவரை எவரேனும் ஒருவர் ஆட்சியில் கோலோச்சுவார்கள்.ஆனால்,தமிழர்களைப் பொறுத்தவரை நாங்கள் பேரம் பேசும் சந்தர்ப்பங்கள் எங்களுக்கு வந்த போதிலும் நாங்கள் வெறுங்கையுடன் தானிருக்கின்றோம். எங்களுடைய சமூதாயத்தை யார் காக்கப் போகின்றார்கள்? என்ற கேள்வி தான் ஆன்மீகத் தலைவர்களிடத்திலும், அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுமக்களிடமும் தற்போது நிலவி வருகின்றது.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் முற்றுமுழுதாக ஆன்மீக வாழ்வில் இணைந்திருப்பவர்கள். ஆனால்,எங்களுடைய சமூதாயம் ஏமாற்றப்படுகின்ற போது மிகவும் துக்கமாகவிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் சரியானதொரு தீர்வு,சரியான ஜனநாயக ஆட்சியியல்,நேர்மையான அரசாங்கம் எங்கள் நாட்டில் தொடர வேண்டுமென்பது ஆன்மிகம் சார்ந்த எங்களுடைய தாழ்மையான வேண்டுகோளாகும்.

தமிழ்மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்போம் தீர்ப்போம் என காலம் கடத்திக் கொண்டு செல்வது வழமையாகி விட்டது. நிர்க்கதியாகவிருக்கின்ற தமிழ்மக்களுக்கு கடவுள் தான் துணை.

தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் எங்கள் நாட்டில் ஜனநாயகம் இல்லையென்பதைத் தாங்களாகவே இன்று உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

தமிழ்மக்கள் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றதெனச் சொல்லுகின்ற போது பலரும் இதனைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், தற்போதைய தென்னிலங்கை அரசியல் சூழ்நிலை இலங்கையில் ஜனநாயகம் இல்லையென்பதை நிரூபித்திருக்கின்றது.

கற்றவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், நீதி செங்கோலை முன்வைத்து அரணாகப் பயன்படுத்துகின்ற பாராளுமன்றத்தில் அநாகரிகமான, மிகவும் வெட்கக் கேடான, வேதனையான நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றமை கவலையளிக்கின்றது.

ஆனால், பாராளுமன்றத்தில் நடந்தேறிய நிகழ்வுகள் வெளி உலகிற்குப் புதிதாகவிருந்தாலும் தமிழ்மக்களைப் பொறுத்தவரை நீதி, நேர்மையில்லாத அரசியல் சூழலை அனுபவித்தவர்கள். அப்பாவி மக்கள் அல்லல்படுகின்ற காலத்தில் காப்பாற்றுவதற்கு யாருமில்லாமல் தவித்தவர்கள். இன்றும் தவிர்க்கின்றார்கள். எனவே, இலங்கை அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் தென்னிலங்கைக்குப் புதிய செய்தியாகவிருந்தாலும் ஏமாற்றப்பட்ட தமிழ்ச் சமூகத்திற்கு இவ்வாறான சம்பவங்கள் பழக்கப்பட்டதாகவேயுள்ளன.

எதுவாகவிருந்தாலும் மக்களுடைய ஆட்சியென்ற வகையில் அரியாசனத்திலிருப்பவர்கள் மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டும்.

தென்னிலங்கை அரசியலில், ஆட்சியலில் நிதானம் இன்று இழக்கப்பட்டு விட்டது. இதனை உலகம் நன்றாக உணர்ந்திருக்கின்றது.

எனவே,இந்தச் சந்தர்ப்பத்திலாவது சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர்கள் ஒன்றுசேர்ந்து இலங்கையில் ஆடசியலை ஒழுங்குபடுத்துகின்ற போது தமிழர்களுடைய பிர்ச்ச்சினைகளையும் தக்க வகையில் தீர்க்க வேண்டுமென்பது தான் எங்களைப் போன்றவர்களின் பேரவா.

இது நடக்குமோ நடக்காதோ என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில், உலகமே அறிந்த தமிழ்மக்களுடைய பிரச்சினை நீண்டகாலமாகத் தீர்க்கப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

{நேர்காணல்:-செல்வநாயகம் ரவிசாந்-}