கூட்டுறவு சட்டங்களை வளைத்திருக்கின்றேன்: மூத்த கூட்டுறவாளர் அருந்தவநாதன் பரபரப்பு பேச்சு(Video)

171

என்னுடைய பதவிக் காலத்தில் நான் கூட்டுறவுச் சட்டங்களை வளைத்திருக்கின்றேனே தவிர முறிக்கவில்லை என ஓய்வுநிலை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், தற்போதைய யாழ்.மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவருமான வி.கே.அருந்தவநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட சமூக அபிவிருத்தி மன்ற ஸ்தாபகர் அமரர் சண்முகம் ஞானப்பிரகாசத்தின் 28 ஆவது ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வும் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கல் நிகழ்வும் அண்மையில் கந்தர்மடம் அரசடி வீதியிலுள்ள மேற்படி மன்ற காரியாலய மண்டபத்தில் இடம்பெற்ற போது கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்திலும் அதற்கு முன்னரும் கூட்டுறவு இயக்கம் தனது போக்கிலேயே வளரும். உள்ளூர் பொருளாதாரக் கொள்கை என்ற காரணத்தினால் மக்கள் கூட்டுறவு நிறுவனத்துடனேயே இணைந்து செயற்பட வேண்டியிருந்தது.

ஆனால்,1977 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஜனாதிபதியாகவிருந்த போது இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கை உருவான காலம் முதல் எங்கள் கூட்டுறவுக் கொள்கையில் நாங்கள் பலவீனப்பட்ட நிலையிலேயே இருந்திருக்கின்றோம்.

வளர்ச்சிப் பாதைக்குச் செல்லவில்லை.எவ்வாறாயினும் எங்களுடைய யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை கூட்டுறவை நேசித்தவர்கள், தலைமை தாங்கியவர்களுடைய சிறந்த ஆற்றல் மற்றும் அறிவு காரணமாக எங்களுடைய யாழ். மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் வளர்ச்சிப் பாதையில் காணப்படுகின்றன.

எங்கே சிறந்த தலைமைத்துவம் காணப்படுகின்றதோ அங்கே கூட்டுறவுக் கட்டமைப்பு சிறப்பான வகையில் அமைந்திருக்கும். இதற்கு எங்களுடைய யாழ்.மாவட்டச் சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்க சமாசமும், யாழ்.மாவட்ட சமூக அபிவிருத்தி மன்றமும் பொருந்தும். கட்டடமொன்று நிர்மாணிக்கப்படும் போது அத்திவாரம் பலமாகவிருந்தால் தான் கட்டடம் சிறப்பாக அமையும்.

அந்த வகையில் அமரர் சண்முகம் ஞானப்பிரகாசம் இட்ட அத்திவாரம் பலமாகவிருந்த காரணத்தினால் தான் நான் தற்போது தலைமைத்துவம் வகிக்கின்ற யாழ்.மாவட்டச் சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கமும் பலமாகவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}