அட்மிரலுக்கு நீதவான் கடும் எச்சரிக்கை!

115

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நேற்று(05) பிற்பகல் பிணையில் செல்ல கோட்டு நீதிமன்றத்தினால்னால் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் சரணடைந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை டிசம்பர்- 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிவான் ரங்க திசநாயக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நேற்று முற்பகல்- 10.30 மணிக்கு சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்பட்ட அவர் பிற்பகல் 02.15 மணியளவில் அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை நீதிமன்ற வளாகத்துக்குள் சுமார் நான்கு மணி நேரமாக வாகனத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் அவரை நீதவான் முன்னிலையில் நிறுத்திய போது அவரைப் பிணையில் விடுவிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் அட்மிரல் விஜேகுணரத்னவை பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சியான கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமுவவை தாக்கி அச்சுறுத்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

எனினும்,சாட்சியை அச்சுறுத்திய வழக்கில் அட்மிரல் விஜேகுணரத்னவின் பெயரை சந்தேகநபராக குறிப்பிட கோட்டே பொலிஸார் மறுத்திருந்தனர்.

இதனால், அவருக்குப் பிணை வழங்கிய நீதவான் கடத்தல் வழக்கிலோ அல்லது விசாரணைகளிலோ தலையீடு செய்யவோ சாட்சிகளுக்கு அச்சுறுத்தலை விடுக்கவோ கூடாதெனக் கடுமையாக எச்சரித்தார்.