யாழ். மருதனார்மடம் சந்தையில் நிரந்தர தேங்காய் வியாபாரிகள் பெரும் பாதிப்பு: ஒரு நேரடி ரிப்போர்ட் (Videos)

353

யாழ்.வலி-தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட மருதனார்மடம் பொதுச் சந்தையில் தேங்காய் வியாபாரத்தில் ஈடுபடும் வெளி வியாபாரிகள் சிலரால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக சந்தையில் நிரந்தரமாகத் தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக நிரந்தரத் தேங்காய் வியாபாரிகளுக்கும்,வெளி வியாபாரிகளுக்குமிடையில் அடிக்கடி கடும் வாக்குவாதங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சந்தையில் நிரந்தரமாக தேங்காய் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

நாம் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வலி. தெற்குப் பிரதேச சபையிடமிருந்து முறைப்படி அனுமதி பெற்று மருதனார்மடம் பொதுச் சந்தையில் தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

இந்நிலையில் கடந்த இரு வருடங்களாக வெளி வியாபாரிகள் சிலர் பிரததேச சபையின் முறையான அனுமதியின்றி எமக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் காரணமாக எமது வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வெளி வியாபாரிகள் எங்களுக்கு முன்பாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் எங்களிடம் தேங்காய் கொள்வனவு செய்ய வருபவர்களை இடைமறித்து வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாம் விலை அதிகமாக விற்பதாகப் பொதுமக்களிடம் பொய்கள் கூறுவதாகவும் கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர். இதனால், கொள்வனவு செய்யும் தேங்காய்கள் பல நாட்களாகத் தேங்கிக் கிடப்பதாகவும் வேதனை வெளியிட்டனர்.

இந்த விடயம் தொடர்பில் வலி. தெற்குப் பிரதேச சபையினரின் கவனத்திற்குப் பல தடவைகள் கொண்டு சென்ற போதும் தகுந்த நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுட்டிக் காட்டி கடந்த பத்துத் தினங்களுக்கு முன்னதாகப் பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் கையெழுத்துக்களுடன் கூடியதாக வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளரிடம் மகஜரொன்று கையளித்தோம். எமது மகஜரைப் பெற்றுக் கொண்ட வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார். எனினும், ஒரு வாரம் கடந்த போதும் உரிய நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை எனவும் விசனம் தெரிவித்தனர்.

குறித்த வெளி வியாபாரிகள் பிரதேச சபையிடம் முறையான அனுமதியைப் பெற்று வியாபாரத்தில் ஈடுபட்டால் தமக்கு ஆட்சேபனையில்லை அவர்கள் மேலும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் க. தர்சனிடம் வினாவிய போது இந்த விடயம் தொடர்பில் தமது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் , அனுமதியின்றி தேங்காய் வியாபாரத்தில் வெளி வியாபாரிகள் சந்தை வியாபாரம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாதெனவும் தெரிவித்தார்.

எனினும், அவர் இவ்வாறு கூறி ஒரு வாரமாகியும் தேங்காய் வியாபாரத்தில் வெளி வியாபாரிகள் ஈடுபட்டு வருவது நிரந்தர வியாபாரிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

எனவே, தாம் எதிர்நோக்கும் பாதிப்புக்களுக்கு வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் உடனடியாகத் தீர்வு பெற்றுத் தர வேண்டுமென்பதே நிரந்தர வியாபாரிகளின் கோரிக்கையாகவுள்ளது.

வாழ்வாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மேற்படி சந்தையின் நிரந்தர தேங்காய் வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாம் தொடர்ந்தும் அவதானத்துடன்….

{நேரடி ரிப்போர்ட் மற்றும் காணொளிகள்:- செ.ரவிசாந்-}