பசுபிக் கடலில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

265

பசுபிக் கடலின் தெற்குப் பகுதியான நியு காலிடோனியாவில் இன்று(06)கடலுக்கு ஆழத்தில் 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவு என்பது மிகப்பெரிய நிலநடுக்கமாகும். இவ்வளவு பெரிய பூகம்பம் கடலுக்கு அடியில் ஆழம் குறைவாக 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிலநடுக்கம் வந்த அருகாமையில் உள்ள லாயல்டி தீவுகளுக்கு 150 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த நிலநடுக்க மையம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த மையத்தை சுற்றி 1000 கிலோ மீற்றர் சுற்றளவிலுள்ள பகுதிகளுக்குச் சுனாமிப் பேரலைகள் எழும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதிகளிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி துரிதமாக நடைபெறுகின்றது.

இதேவேளை, இந்த சுனாமி அலைகள் ஐந்து நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை வீசலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.அலையின் உயரம் மூன்று மீற்றர் வரை காணப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.