இலங்கை அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இதுதான் ஒரே வழி!!

102

தற்போதைய அரசியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும்,ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் ஒரு அறைக்குள் அடைத்து விட வேண்டுமென ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்துள்ள செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒன்றில் அவர்கள் ஒருவரை மற்றவர் கொலை செய்யட்டும். அல்லது ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொள்ளட்டும்.

எவ்வாறாயினும் இரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது.

தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முதலில் ஜனாதிபதி யாருக்குப் பெரும்பான்மையிருக்கின்றதோ அவர்களிடம் அரசாங்கத்தைக் கொடுக்க வேண்டும்.

ஒரு சரியான அரசாங்கமில்லாமல் நாட்டை நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்ய முடியாது. அதற்கென சில பணிகளுள்ளன.

முதல் நடவடிக்கையாக புதிய அரசாங்கத்தைக் கொண்டு வந்து அரசியலமைப்புச் சதியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு சிறப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும்.

புதிய அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழிப்பதுடன் அதற்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.