ஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா! (Videos)

87

இராணுவத் தகவல் தொடர்புக்கான அதிநவீன ஜிசாட்-7ஏ செயற்கைக் கோள் ஜிஎஸ்எல்வி- 11 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இன்று(19)பிற்பகல்-04.10 மணிக்கு செலுத்தப்பட்ட ஜிசாட் 7ஏ செயற்கைகோளின் பயணம் வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட இராணுவப் பயன்பாட்டுக்கான அதிநவீன ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

இந்த செயற்கைக் கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-11 விண்ணோடம் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் மையத்தின் 2 ஆவது ஏவுதளத்திலிருந்து இன்று பிற்பகல் விண்ணில் செலுத்தப்பட்டது.

திட்டமிடப்பட்ட இடத்தில் ஜிசாட்7ஏ செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவரையொருவர் ஆரத் தழுவி வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மொத்தமாக எட்டு ஆண்டுகள் ஆயுட்காலம் பெற்றுள்ள இந்த செயற்கைக்கோளில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரோவின் நான்காம் தலைமுறை ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி-எஃப்11 மூன்று படிநிலைகளைக் கொண்டுள்ளது.

முதல் படிநிலையில் 4 லிக்யூடு ஸ்ட்ராப்-ஆன்ஸ், சாலிட் ராக்கெட் மோட்டார் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

2.2 டன் எடை கொண்ட இந்த செயற்கைக் கோள் இந்தியாவின் 39 ஆவது செயற்கைக் கோள். 2 ஆவது படிநிலையில் திரவ எரிபொருளைக் கொண்டு இயங்கும் ஹைதிரஸ்ட் எஞ்சினிருக்கிறது. 3 ஆவது மற்றும் இறுதி படிநிலையில் கிரையோஜெனிக் அப்பர் ஸ்டேஜ் உள்ளது என இஸ்ரோ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் இதில் இடம்பெற்றுள்ளது. க்யூ பேண்ட் பயனாளர்களில் தொலைத் தொடர்புக்கு உதவக்கூடிய குறித்த செயற்கைக் கோளை இந்திய ராணுவத்தின் தேவைக்காக இந்தியா அர்ப்பணிக்க உள்ளது.

ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பது மற்றும் போர்க்காலங்களில் வான்வழித் தாக்குதல் பணிகளுக்கு இந்த செயற்கைக் கோள் பெரிதும் பயன்படும். இந்திய ரேடார் கட்டுப்பாட்டு மையங்களுக்கு விமானங்களின் இருப்பிடத்தையும் இது துல்லியமாகக் காட்டும்.

இதேவேளை,புவி வட்டப்பாதையில் இதுவரை 320 இராணுவ பயன்பாட்டுக்கு உதவக்கூடிய செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதில் பாதிக்கும் மேற்பட்ட கோள்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ளன.

இதுதவிர ரஷ்யா,சீனா நாடுகளும் பல்வேறு இராணுவ பயன்பாட்டுக்குரிய செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.