யாழில் நீண்டதூர துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி: முதியவர்களும் பங்கேற்பு (Video)

260

முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி. ஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள்,முன்னாள் அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவைத் தலைவர்,முன்னாள் தமிழக முதல்வர் செல்வி- ஜெ. ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள், அமரர்- பொன் மதிமுகராஜாவின் 20 ஆம் ஆண்டு நாள்,இயற்கை அனர்த்தம் சுனாமியின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள் என்பவற்றை வழமை போன்று இவ்வருடமும் முப்பெரும் விழாவாக நடாத்துவதற்கு யாழ். தாவடியிலுள்ள அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவையின் தலைமை விழா ஏற்பாட்டுக் குழு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

மேற்படி முப்பெரும் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை(25) காலை- 07 மணியளவில் கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய முன்றலில் விசேட மேளக் கச்சேரி நிகழ்வுகளுடன் ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவையின் தலைவர் பொன்மதிமுகராஜா விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழாவுக்கான போட்டி நிகழ்வுகள் ஆரம்பமானது.

ஆலய முன்றலில் ஆரம்பமான ஆண்களுக்கான 40 மைல் துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டியை முன்னாள் வடக்கு மாகாண அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்துமத விவகார முன்னாள் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே. என். டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியசைத்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

குறித்த விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்ட டக்ளஸ் தேவானாந்தாவுக்கு விழா ஏற்பாட்டாளர்களால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

கொக்குவில் மஞ்சவனப் பதி முருகன் ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி யாழ். ஆஸ்பத்திரி வீதியூடாக கச்சேரியை அடைந்து அங்கிருந்து கல்வியங்காடு முத்திரைச் சந்தியை அடைந்து அங்கிருந்து பருத்தித்துறை வீதியூடாக வல்லை சந்தியைச் சென்றடைந்தது. பின்னர் அதன் ஊடாக அச்சுவேலியை அடைந்து அச்சுவேலிச் சந்தியூடாக நிலாவரைச் சந்தியை அடைந்து அங்கிருந்து புன்னாலைக்கட்டுவன் சந்தியைச் சென்றடைந்து அதன் ஊடாக சுன்னாகம் சென்றடைந்தது.

பின்னர் கே.கே.எஸ். வீதியூடாக மருதனார்மடம், இணுவில், தாவடி ஆகிய இடங்கள் ஊடாக கொக்குவில் மஞ்சவனப் பதி முருகன் ஆலய முன்றலைச் சென்றடைந்தது.

குறித்த துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி நிகழ்வில் இளைஞர்கள் மட்டுமன்றி முதியவர்கள் சிலரும் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பெண்களுக்கான துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி, 25 வயதுக்குட்பட்டோருக்கான மரதன் ஓட்டப் போட்டி, 08 மைல் மூன்று சில்லு சைக்கிள் றிக்சோ ஓட்டப் போட்டி, கழகங்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டி நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவையின் தலைமை விழா ஏற்பாட்டுக் குழு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}