பிரமாண்ட சிலையையுடைய யாழ். மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட தேர்த் திருவிழா (Video)

353

பிரசித்திபெற்ற மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை(04-01-2019) காலை சிறப்பாக இடம்பெற்றது.

காலை-07.30 மணியளவில் வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து 09 மணியளவில் ஆஞ்சநேயப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளினார்.அதனைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க திருத்தேர் பவனி ஆரம்பமாகியது.

ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் வடம் தொட்டிழுக்க ஆஞ்சநேயப் பெருமான் வீதி வலம் வந்த காட்சி அற்புதமானது.

ஆஞ்சநேயப் பெருமான் வீதி வலம் வந்த போது ஆண் அடியவர்கள் பலர் அங்கப் பிரதட்சணை செய்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும், கற்பூரச் சட்டிகளைக் கைகளில் தாங்கியும் நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.

திருத்தேர் முற்பகல்-10.30 மணியளவில் இருப்பிடத்தை சென்றடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.

ஆலயப் பிரதமகுரு இ.சுந்தரேஸ்வர சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் தேர்த்திருவிழா உற்சவக் கிரியைகளை நிகழ்த்தினர்.

இவ்வாலயத் தேர்த் திருவிழா உற்சவத்தில் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பாகங்களிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டனர்.

தேர்த்திருவிழா உற்சவத்தில் கலந்து கொண்டிருந்த அடியவர்களின் தாகம் தீர்க்கும் வகையில் ஆலயச் சுற்றாடலில் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுக் குளிர்பானங்கள் பரிமாறப்பட்டன.

அத்துடன் ஆலய மண்டபத்தில் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.

தேர்த் திருவிழா உற்சவத்தில் கலந்து கொண்டிருந்த அடியவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் சுன்னாகம் பொலிஸார் ஈடுபட்டனர்.

இதேவேளை, நாளை சனிக்கிழமை(05)அனுமன் ஜெயந்தி உற்சவம் இவ்வாலயத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோயிலின் முகப்பில் எழுந்தருளப் பெற்றுள்ள அனுமான் சிலையானது யாழ். மண்ணுக்கே அடையாளமாக விளங்குகின்றது.

72 அடி உயரமான இந்த சிலையானது கடந்த- 2013 இன் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது.இது இலங்கையிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலையாக விளங்குகின்றது.

மருதனார்மடத்திற்குட்பட்ட பகுதியில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய வகையில் குறித்த திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}