வைத்திய நிபுணர் ரகுபதியின் நினைவு நாளில் யாழ். இணுவில் இளைஞர்கள் செய்த நற்காரியம் (Video)

457

கடந்த டிசம்பர் மாதம்-11 ஆம் திகதி மாரடைப்பால் காலமான தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் பிரபல பொதுவைத்திய நிபுணர் அ.ரகுபதியின் 31 ஆவது நாள் நினைவேந்தலை முன்னிட்டு இன்று புதன்கிழமை(09)யாழ். இணுவிலில் மாபெரும் குருதிக் கொடை முகாம் காலை-09.15 மணி முதல் இடம்பெற்றது.

இணுவில் அறிவாலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக பந்தலில் நடைபெற்ற குறித்த குருதிக் கொடை முகாம் நிகழ்வை இணுவில் வாழ் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தமை முக்கியமான அம்சமாகும்.

குறித்த குருதிக் கொடை முகாம் நிகழ்வில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினரும் இணைந்து நேரடியாக குருதி பெற்றுக் கொண்டனர்.

குறித்த குருதிக் கொடை முகாமில் ஐந்து பெண்கள் உட்பட இளைஞர்கள், நடுத்தர வயதினர் என 51 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதி தானம் வழங்கியதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம.பிரதீபன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இதேவேளை,வைத்திய நிபுணர் அ.ரகுபதி மீது கொண்டிருந்த ஆராத அன்பினால் மேற்படி குருதிக் கொடை முகாம் நிகழ்வை முன்னின்று ஏற்பாடு செய்த இணுவில் வாழ் இளைஞர்களின் சமூக நோக்கிலான பணியை கிராம மக்கள் உட்படப் பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:-செ.ரவிசாந்-}