பிரபல வைத்திய நிபுணர் ரகுபதிக்கு யாழ். இணுவிலில் உணர்வுபூர்வ அஞ்சலி (Video)

901

கடந்த டிசம்பர் மாதம்-11 ஆம் திகதி மாரடைப்பால் காலமான தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் பிரபல பொதுவைத்திய நிபுணர் அமரர் அம்பலவாணர் ரகுபதியின் 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை(09-01-2019) முற்பகல்-11 மணி முதல் யாழ். இணுவில் அறிவாலய மண்டபத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

பொதுவைத்திய நிபுணர் அ.ரகுபதியின் சகோதரரான அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் புலம்பெயர்ந்து வசித்து வரும் உயிரியல் பாதுகாப்பு உத்தியோகத்தர் அ. ஜெகதீஸ் மற்றும் அவரது சகோதரியான கைதடி சித்த ஆயுர்வேதப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி- பிறேமா சிவசண்முகராசா ஆகியோர் ரகுபதியின் உருவப்படத்திற்கு முன்பாக நினைவுச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து வடபிராந்திய ஓய்வுநிலை மக்கள் வங்கி முகாமையாளர் அ.குகதாசன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இறைவணக்கம்,பொது வைத்திய நிபுணர் அ . ரகுபதியின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இரண்டு நிமிட மெளனப் பிரார்த்தனை என்பன இடம்பெற்றன.

தொடர்ந்து வைத்திய நிபுணர் அ. ரகுபதியின் பசுமையான நினைவுகளைத் தாங்கிய “ரகுபதி காவியம்” எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தொடர்ந்து பிரபல பொதுவைத்திய நிபுணர் அ.ரகுபதி ஞாபகார்த்த நினைவுரைகள் ஆரம்பமாகின.

உடுவில் பிரதேச செயலரும், வைத்தியகலாநிதி ரகுபதியின் நெருங்கிய நண்பருமான சி. ஜெயகாந், இலண்டலிருந்து வருகை தந்த பிரபல வைத்தியநிபுணர் கணபதிப்பிள்ளை பார்த்தீபன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியரும், இணுவில் மண்ணின் மைந்தருமான க. தேவராஜா, புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியின் அதிபரும், வைத்தியகலாநிதி ரகுபதியின் நெருங்கிய உறவினருமான எஸ். இளங்கோவன், சிவபூமி அறக் கட்டளையின் தலைவரும், இணுவில் அறிவாலயத்தின் ஸ்தாபகருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப் பிரிவின் ஆணையாளர் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்தினர்.

நினைவுரைகள் ஆற்றிய அனைவரும் வைத்திய நிபுணர் அமரர் ரகுபதி வைத்தியத் துறைக்கு ஆற்றிய மகத்தான சேவைகளையும், அவரது தனித்துவமான குணாம்சங்களையும் மெச்சிப் பேசினர்.

நினைவுரைகளைத் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியபோசனம் பரிமாறப்பட்டன.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட அவரது குடும்ப உறவுகள் அவரது நினைவுகள் தாளாமல் கண்ணீர் சிந்திய வண்ணமிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, மேற்படி நினைவேந்தல் நிகழ்வுகளில் வைத்தியகலாநிதி அமரர் ரகுபதியின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அவரது நெருங்கிய நண்பர்கள், பல்துறை சார்ந்தவர்கள், கிராம மக்கள் எனப் பல நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{செய்திக் கட்டுரையாக்கம் மற்றும் காணொளி:-செ.ரவிசாந்-}