போர்க் குற்றச்சாட்டுக்குள்ளான சவேந்திர சில்வாவுக்கு முக்கிய பதவி!

500

இலங்கை இராணுவத்தின் 53 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த 1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்தவராவர்.

இவர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றியவராவார்.இறுதிக்கட்டப் போரில் கொமாண்டோ பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாகவும் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்ட இவர் மன்னார் முதல் முள்ளிவாய்க்கால் வரையான போரில் முழுமையாகப் பங்கெடுத்தவர்.

இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவாக இருந்த 53 ஆவது டிவிசனின் வான்வழி நகர்வுப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டுமென அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் பொறுப்பாளர்கள், தளபதிகள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இவருக்கும் நேரடித் தொடர்புகள் காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

போர் முடிந்த பின்னர் கடந்த- 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஐ.நாவுக்கான துணைத் தூதுவராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த- 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முக்கியமான பதவி நிலைகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி தற்போது அவரை இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவிக்கு நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.