ஏழாலை உறைபவளே அம்மா…! கவிமணி அன்னைதாசனின் சிறப்பு இசை சொற்பொழிவு (Video)

365

ஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் சாதாரண தாயல்ல…பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியவள். தற்போதும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றாள் எனத் தெரிவித்துள்ள மூத்த இசைச் சொற்பொழிவாளரும், ஓய்வுநிலை அதிபரும், வசந்த நாகபூசணி அம்பாளின் மீளா அடியவருமான கவிமணி க. ஆனந்தராஜா(அன்னைதாசன்) வெறுமனே இந்த ஆலயம் அருள்வாக்கு மாத்திரம் சொல்லுகின்ற ஆலயமல்ல..இங்கு பல்வேறு சமூகப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வலிகாமத்தில் பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் யாழ்.ஏழாலை தெற்கு களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(11-01-2019)முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாவதை முன்னிட்டு எமது செய்திச் சேவைக்கு வழங்கிய சிறப்பு இசைச் சொற்பொழிவு நிகழ்வை அம்பாள் அடியவர்களான உங்களுக்குத் தருவதில் அக மகிழ்வடைகின்றோம்.

வாருங்கள்…கவிமணி அன்னைதாசனின் ஆராத பக்தி வெள்ளத்தை நீங்களும் அள்ளிப் பருகுங்கள்.

இன்று என்னைப் பாடகனாக்கிய தலத்தைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

இன்றைய தினம் ஏழாலை களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. இன்றைய நன்னாளில் அம்பிகையின் திருவருள் சிறப்பினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை “Jaffna Vision” எனக்குத் தந்துள்ளது.

கடந்த-1987 ஆம் ஆண்டு உரும்பிராய் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நான் நவராத்திரி தொடர் இசைச் சொற்பொழிவை ஆற்றிக் கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு ஐயா வந்தார். ஏழாலையில் ஒரு அம்மன் ஆலயம் குடி கொண்டுள்ளது. அங்கே அம்மன் அருள் வாக்கிடுகிறாள். அங்கே நீங்கள் நவராத்திரி காலத்தில் வருகை தந்து இசை சொற்பொழிவொன்றை ஆற்ற வேண்டுமெனக் கூறினார்.

இரவு-07 மணி முதல் 08 மணி வரை இடம்பெறும் தொடர் சொற்பொழிவை முடித்துக் கொண்டு அம்பிகையிடம் சென்றேன். அவளைப் பார்த்தேன்.

என்னுடைய இயல்பு என்னவெனில் உங்களில் பலருக்கும் தெரியும். நான் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அந்தக் கோயிலைப் பற்றிப் பாட்டு இயற்றிப் பாடுவேன். அந்த வகையில் உரும்பிராய் சத்தியசாயி சமித்தியுடன் தொடர்புடைய சங்கீத பூசணம் மணி அன்ரி என்னை ஒரு பாடலொன்றையும் இயற்றிக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

கடந்த-1987 ஆம் ஆண்டு முதல் சுமார்-15 வருடங்களுக்கு மேலாக தலைவர்,செயலாளராக உரும்பிராய் சத்தியசாயி சமித்தியில் நான் கடமையாற்றியிருந்தேன். அந்த வகையில் சாயி பாபா மெட்டில் அமைந்த பாடல்களை இயற்றிப் பாடுகின்ற வாய்ப்பினை என் தாய் நாகபூசணி எனக்குத் தந்தாள்.

எனவே,முதற் பாடலாக”ஏழாலை உறைபவளே அம்மா…” என்ற பாடலை இயற்றிப் பாடினேன். பாடியது மாத்திரமல்லாமல் அதனை ஒலிநாடாவில் பதிந்தும் கொடுத்தேன். அம்மாவுக்கு நன்றாகப் பிடித்துப் போய்விட்டது. ஐயா…இன்னும் இரண்டு, மூன்று பாடல்கள் இயற்றித் தருமாறும் கேட்டுக் கொண்டார்.

கடந்த காலங்களில் நாங்கள் சைக்கிளின் சில்லு சுற்றித் தான் ஒலிநாடாவில் பாடல் கேட்போம்.

நான் அம்பிகை ஆலயத்திற்கு செல்வதற்கு முன்னர் முருகன் என்ற அடியார் கிராமிய முறையில் காத்தவராயன் மெட்டில் அம்மன் தாலாட்டுப் பாடல்களை உடுக்கு ஓசையுடன் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

நான் சென்ற பின்னர் அருள்வாக்கு சொல்லுகின்ற அம்மாவுக்கு வசந்தகுமாரி பெயர் ஆதலால் ஏழாலை வசந்தபுரம் என்ற பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

” அகிலத்தை ஆள்பவளே வசந்தபுரத் தாயே- நீயும்
ஆறுதலைத் தாவேன் அம்மா வசந்தபுரத் தாயே
இனிய குணமுடைய வசந்தபுரத் தாயே- நீயும்
ஈடு இணையற்றவள் தான் வசந்தபுரத் தாயே”

இவ்வாறு நான் பல பாடல்கள் எழுத ஆரம்பித்தேன். அந்த வகையில் சிறியேன் இயற்றிப் பாடிய பாடல் வருமாறு,

வசந்தபுரத்துறை அம்பிகைத் தாயே…அம்பிகைத் தாயே…
ஆதரிப்பாயே…வசந்தபுரத்துறை அம்பிகைத் தாயே…
இப்புவி மாந்தரின் அருட்தாயே…
இப்புவி மாந்தரின் அருட்தாயே…
அருட்தாயே…எங்கள் அருட்தாயே….
ஆதரிப்பாய் எங்கள் அருட்தாயே….
வசந்தபுரத்துறை அம்பிகைத் தாயே…

இதேபோன்று சாயி சமித்தியில் அரகர சிவசிவ அம்பலவாணா… என்ற ரம்மியமான மெட்டுக்களில் சுமார் நூறு பாடல்கள் வரை இதுவரை இயற்றிப் பாடிக் கொண்டிருக்கின்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

ஏழாலை தெற்கு வசந்தபுரம் வசந்தநாகபூசணி அம்பாள் ஆலயம் திருவருள் பொழிகின்றதொரு ஆலயம். அருள் வாக்கு சொல்லுகின்றதொரு ஆலயம். முன்னர் அவள் கொட்டிலில் இருந்தாள்…இன்று கோபுரமும் கொண்டு விட்டாள்.

என்னுடன் சேர்ந்து இயங்கிய பக்கவாத்தியக் கலைஞர் அமரர்- தம்பு சற்குருநாதன் அவரது துணைவியார் மற்றும் வேலையா, ஹார்மோனியம் வரதன் ஆகியோரும் என்னைப் பின்பற்றி அம்பாளுக்குப் பாடல்கள் இயற்ற ஆரம்பித்தார்கள்.

“ஏழாலை வசந்தநாகபூசணியம்மா- உன்னைத்
துதிப்போர்க்குத் துன்பமெல்லாம் தீருமம்மா
ஏழாலை வசந்த நாகபூசணியம்மா- உன்னைத்
துதிப்போர்க்குத் துன்பமெல்லாம் தீருமம்மா

இது அமரர்- தம்பு சற்குருநாதன் எழுதிய பாடல். அம்பிகையைத் துதி செய்யும் வகையில் அமைந்த பாடல்களை உள்ளடக்கிய நூலொன்றை வெளியிட்டார்கள். அந்த நூலில் என்னுடைய பத்துப் பாடல்களும்,அமரர்- தம்பு சற்குருநாதனின் மூன்று பாடல்களும் இணைந்து அந்த நூல் வெளி வந்தது. அதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு ஆலய கும்பாபிஷேக மலரில் என்னுடைய பாடல்கள் தனிப்பாடல்களாக வெளிவந்தன. அந்த நூல்கள் தற்போதும் அடியவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நான் இயற்றிப் பாடிய பாடல்கள் அனைத்தும் ஒலிநாடாக்களாகவும் பின்னர் சீ.டிக்களாகவும் வெளிவந்துள்ளன. அவற்றையெல்லாம் தற்போது பல அடியவர்கள் மாந்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் சாதாரண தாயல்ல…பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியவள். தற்போதும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றாள்.

வெறுமனே இந்த ஆலயம் அருள்வாக்கு மாத்திரம் சொல்லுகின்ற ஆலயமல்ல…அங்கு அன்னப் பணி நடக்கிறது. வறிய பிள்ளைகளுக்கு ஆலயம் சார்பாக ஆடைகள் வழங்கப்படுகின்றன. கல்வி தானம் செய்கின்றார்கள்.

அதுமட்டுமன்றி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மீளவும் தனது சொந்தவிடத்தில் இயங்க ஆரம்பித்த போது வைத்தியசாலை இயங்குவதற்குப் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. இவ்வாறானதொரு சூழலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு சொல்லரிய உதவிகள் இவ்வாலயத்தால் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பல அறப்பணிகளை இந்த ஆலயம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது என்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன் என்றார்.

இதேவேளை,கவிமணி க. ஆனந்தராஜா(அன்னைதாசன்) ஏழாலை தெற்கு களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாள் மஹோற்சவத்தை முன்னிட்டு வழங்கிய முழுமையான இசை சொற்பொழிவை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் கண்டு கேட்டு இன்புறலாம்.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:-செ.ரவிசாந்-}