ரவிராஜ் கொலை வழக்கு: மீண்டும் பரிசீலனைக்கு…

110

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை இந்த மாதம்-30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அச்சல வெங்கப்புலி நேற்றைய தினம்(10) மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது மனுவின் பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு இதுவரை அறிவித்தல் கிடைக்கவில்லை என மன்றுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

மற்றுமொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதிவாதிக்கு அறிவித்தலைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனுதாரர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பிரதிவாதிகளையும் கடந்த- 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்- 23 ஆம் திகதி மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்தநிலையில் மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக சசிகலா நடராஜினால் மேன்முறையீடு செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.