ரில்வின் சில்வாவுக்கு பத்து மில்லியன் இழப்பீடு: விமல் வீரவன்சவுக்கு உத்தரவு

121

விமல் வீரவன்ச மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு பத்து மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமென கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புலமைச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே அவருக்கு மேற்கண்ட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு வணிக மேல்நீதிமன்ற நீதவான் ருவான் பெர்னாண்டோவினால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச அவரது பெயரில் வௌியிட்ட நூலொன்றில் உள்ளடக்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தும் அவர் மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த போது தாம் நிறைவேற்றுக் குழுவில் முன்வைத்த கருத்துக்கள் எனத் தெரிவித்தே ரில்வின் சில்வா மேற்படி வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கொழும்பு வணிக மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கில் நூலின் சொத்துரிமை ரில்வின் சில்வாவிற்கே உரித்தானது எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.