வடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ். நகரில் நாளை ஆரம்பம் (Video)

337

வடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை(25) காலை யாழ்.நகரில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

பத்தாவது தடவையாக யாழில் முன்னெடுக்கப்படும் மேற்படி கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.

கண்காட்சிக்கான ஏற்பாடுகள் கடந்த பல நாட்களுக்கு முன்னரே ஆரம்பமாகிய நிலையில் நேற்றைய தினமும்(23) இன்றைய தினமும்((24)மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த கண்காட்சியில் நிர்மாணம், விருந்தோம்பல், உணவு, பான வகை, பொதியிடல், மோட்டார் வாகனம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிதியியல் சேவைகள், ஆடையணி, விவசாயம், நுகர்வோர் பொருட்கள் எனப் பல வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

விசேடமாக இந்தியாவிலிருந்து வருகை தரும் வர்த்தகப் பெருமக்கள், தொழில் முயற்சியாளர்கள் கைத்தொழில் மற்றும் மருத்துவ கூடங்களை குறித்த கண்காட்சியில் அமைத்துள்ளனர்.

ஆண்டுதோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் கண்காட்சியாக வடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி திகழ்கிறது. இவ்வருடம் 2,500 இற்கும் மேற்பட்ட உற்பத்திகளுக்கு 50 வீதம் விலைத் தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் இந்தக் கண்காட்சியில் சிறுவர்களுக்கு விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ள இடம் மற்றும் கொண்டாட்ட நிகழ்வு, இலவச முக அலங்கார அழகுக் குறிப்புக்கள் மற்றும் ஆலோசனை, குலுக்கல் முறை பரிசுகள் என்பன விசேடமாக இடம்பெறவுள்ளன.

நாளை ஆரம்பமாகும் மேற்படி வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும்- 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- யாழ்.நகரிலிருந்து செ- ரவிசாந்-}