யாழில் பிரமாண்ட சர்வதேச வர்த்தக கண்காட்சி கோலாகல ஆரம்பம் (Videos)

256

வடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை(25) யாழ்.நகரில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் துறை மன்றம் பல நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த கண்காட்சி இந்த வருடம் பத்தாவது தடவையாக நடாத்தப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல்-10 மணிக்கு குறித்த கண்காட்சி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றது.

யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் துறை மன்றத் தலைவர் கே.விக்கினேஸ் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் யாழ். மாநகர சபையின் முதல்வர் இ. ஆர்னோல்ட், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்,யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ச.பாலச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் பவனி முன்னே செல்ல மங்கல வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் யாழ்.முற்றவெளி மைதானத்தை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். மாநகர சபையின் முதல்வர் இ. ஆர்னோல்ட் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் கண்காட்சி நிகழ்வைப் பார்வையிட்டனர்.

குறித்த கண்காட்சி நிகழ்வில் இந்தோனேசியாவிலிருந்து வருகை தந்த பல வர்த்தக நிறுவனங்கள் கண்காட்சிக் கூடங்களை அமைத்துள்ளன. அத்துடன் உள்நாட்டைச் சேர்ந்த பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் கண்காட்சிக் கூடங்களை அமைத்துள்ளனர்.

இன்றைய தினம் இரண்டாவது நாளாக இடம்பெறும் இந்தக் கண்காட்சி நாளைய தினம்(27) வரை இடம்பெறும்.

இதேவேளை,இந்தக் கண்காட்சி நிகழ்வைப் பார்வையிட வருகை தரும் பாடசாலை மாணவர்கள் அனைவரும் இலவசமாக குறித்த கண்காட்சியைப் பார்வையிட முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:-செ.ரவிசாந்-}