13 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்: விஜய் மல்லையா கதறல்!! (Photos)

278

வங்கிகளுக்கு ஒன்பதாயிரம் கோடி ரூபா வரை கடன் செலுத்த வேண்டிய நிலையில் தனது 13 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபா அளவிற்கு கடன் பெற்ற விஜய் மல்லையா அந்தக் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தாமல் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று விட்டாா். அவரை நாடு கடத்துவது தொடா்பான வழக்கு இலண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் இறுதியில் விஜய் மல்லையாவை மோசடிக்காரா், சதிகாரா், பணமோசடி எனத் தெரிவித்த நீதிமன்றம் அவரை நாடு கடத்தவும் உத்தரவிட்டது.

இதனைத் தொடா்ந்து மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகள் இடம்பெற்று வந்தன. இந்நிலையில் மல்லையா தொடா்பான பொருளாதாரக் குற்ற வழக்குகளை விசாரித்து வந்த மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த-05 ஆம் திகதி இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின் போது விஜய் மல்லையாவைத் தப்பி ஓடிய பொருளாதாரக குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவா் பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாமெனவும் நீதிமன்றம் கூறியது.

அதனைத் தொடர்ந்து விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான 13 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ள விஜய் மல்லையா தினமும் காலையில் எழும்போது புதிதாகத் தனது மற்றொரு சொத்தைப் பறிமுதல் செய்ய அதிகாரிகள் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் கடன்பெற்ற வங்கிகளுக்கு வட்டியுடன் ஒன்பதாயிரம் கோடி செலுத்த வேண்டியுள்ள நிலையில் தன்னுடைய 13 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது நியாயமா? எனவும் விஜய் மல்லையா கேள்வியெழுப்பியுள்ளார்.