பார்வையாளர்களை அசர வைத்த யாழ்.குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்கள்: விளையாட்டு நிகழ்வில் கோலாகலம் (Videos)

655

யாழ்.குப்பிழான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை(08) பிற்பகல்-01 மணி முதல் குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள விக்னேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் விமரிசையாக இடம்பெற்றது.

வித்தியாலய முதல்வர் க.காராளசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலிகாமம் கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மதியழகன் பிரதம விருந்தினராகவும்,வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.முரளிதரன் சிறப்பு விருந்தினராகவும், பலாலி வடக்கு அ. த. க பாடசாலையின் அதிபர் திருமதி- சி.சுகுமார் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய முன்றலிலிருந்து மைதானத்தை நோக்கிப் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் சம்பிராதயபூர்வமாக ஆரம்பமானது.

80 மீற்றர் ஓட்டம், 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், 400 மீற்றர் ஆண்,பெண்களுக்கான அஞ்சலோட்ட நிகழ்வுகள், ஆண், பெண்களுக்கான கயிழுத்தல்,ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான சங்கீதக் கதிரை,விநோத உடைப் போட்டி, பழைய மாணவர்களுக்கான ஓட்டம்,பெற்றோர்களுக்கான பந்துப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.

குறிப்பாக விளையாட்டுப் போட்டியின் இடைவேளை நிகழ்வின் போது மாணவ, மாணவிகளின் கண்கவர் உடற்பயிற்சி நிகழ்வுகள் களைகட்டியது. இந்த நிகழ்வுகள் வழமையாக பாடசாலை விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் இடைவேளையின் போது இடம்பெறும் நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருந்தன.

மிகவும் கோலாகலமானதாக அமைந்த இந்த நிகழ்வுகளைப் பார்வையாளர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துப் பூரித்துப் போயினர்.

நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைவரும் குறித்த உடற்பயிற்சி நிகழ்வுகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினர்.

மாணவ, மாணவிகள் விளையாட்டு நிகழ்வுகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

விளையாட்டு நிகழ்வுகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து வித்தியாலய அதிபர் தலைமையில் பரிசளிப்பு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இதன் போது விளையாட்டு நிகழ்வுகளில் மிகவும் திறமையாக விளையாடிய மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் மற்றும் பரிசில்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

பரிசளிப்பு நிகழ்வின் இறுதியாக இல்லங்கள் பெற்ற மொத்தப் புள்ளிகளின் விபரம் வெளியிடப்பட்டது. இதன்படி தம்பிராசா இல்லம்(சிவப்பு) 539 புள்ளிகள் பெற்று முதலாமிடத்தையும், சுப்பையா இல்லம்(மஞ்சள்) 465 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

முதலாமிடம் பெற்ற இல்லத்தின் பலத்த கரகோசங்களுக்கு மத்தியில் விருந்தினர்களிடமிருந்து வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டனர்.

கந்தையா செல்லையா ஞாபகார்த்தமாக நோர்வே நாட்டில் வசிக்கும் அவரது மகன் செல்லையா விக்னேஸ்வரராஜாவின் நிதி அன்பளிப்பில் இந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.

குப்பிழான் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், குப்பிழான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் துடிப்பான நடுவர்களாகச் செயற்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் சிறக்கத் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கினர்.

விளையாட்டு நிகழ்வுகளின் அறிவிப்பாளர்களாக இணுவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியரும்,மண்ணின் மைந்தனுமான தில்லையம்பலம் சசிதரன்,வைரவநாதன் தமிழ்ச் செல்வன் ஆகியோர் செயற்பட்டனர்.

மேலும்,பாடசாலை மாணவர்கள்,அதிபர்,ஆசிரியர்கள் மாத்திரமன்றி ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்களும் மேற்படி விளையாட்டு நிகழ்வின் ஏற்பாட்டுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தமை வேறெங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.

குறித்த விளையாட்டு நிகழ்வுகளில் பாடசாலை மாணவ, மாணவிகள்,ஆசிரியர்களுடன் அயற்பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர்கள்,முன்னாள் ஆசிரியர்கள், பலாலி விமானப்படையினர்,கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை,குறைந்த வளங்களுக்கு மத்தியிலும் கிராமியப் பாடசாலையான குப்பிழான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் விளையாட்டு நிகழ்வுகள் நிறைவாக அமைந்திருந்ததாக விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டு நிகழ்வுகளை முன்னிட்டு குப்பிழான் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானம் விழாக் கோலம் பூண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{செய்திக் கட்டுரையாக்கம் மற்றும் காணொளி:- யாழ். குப்பிழானிலிருந்து செ-ரவிசாந்-}