யாழ். ஏழாலை அத்தியடி விநாயகர் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று: ஆலய சூழல் விழாக் கோலம் (Videos)

95

ஏழாலை எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் முதன்மைத் தெய்வமாகவுள்ள யாழ்.ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(10)காலை-08.58 மணி முதல் 10.05 மணி வரையுள்ள சுபநேரத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது.

இன்று காலை-07 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் மஹா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி உள்ளது.

நானாவித மங்கள வாத்திய சகிதம் கும்பங்கள் வீதியுலா, காலை-09 மணிக்கு ஸ்தூபி கும்பாபிஷேகம், விநாயகப் பெருமான் மஹா கும்பாபிஷேகம், பகல்-09.45 மணியைத் தொடர்ந்து ஏனைய பரிவார தேவர்களுக்கு மஹா கும்பாபிஷேகம், தச தர்சனம், திருக்கதவு திறக்க திருமறைக்காடு,திருக்குறுந்தொகை ஓதல், எஜமான் அபிஷேகம், ஆசிர்வாதம், ஆசியுரை, சிவாச்சாரிய சம்பாவனை, மஹா அபிஷேகம்,திரவிய அபிஷேகம், விசேட பூஜை வழிபாடு, விநாயகப் பெருமான் வீதியுலா வருதல் அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை(அன்னதானம்)என்பன இடம்பெறும்.

கும்பாபிஷேக கிரியைகள் ஆலயப் பிரதம குரு சிவாகம பூஷணம் சிவஸ்ரீ தி. சோமநாதக் குருக்கள் தலைமையில் இடம்பெறும்.

இவ்வாலய கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்கக் கிரியைகள் கடந்த-06 ஆம் திகதி காலை-09.15 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகியது.

நேற்று சனிக்கிழமை(09)மாலை பஞ்சமுக அர்ச்சனை வழிபாடு உள்ளிட்ட வழிபாடுகள் இடம்பெற்றன.

இதேவேளை,இவ்வாலய பரம்பரை தர்மகர்த்தா முருகேசு பாலசுப்பிரமணியம் எமது செய்திச் சேவைக்கு விசேடமாக கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த-2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அன்பர்களின் ஒத்துழைப்புடன் இவ்வருடம் ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் இடம்பெறுகிறது.

இவ்வாலயம் முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பின்னர் நிர்வாகப் பிரச்சினைகளால் மூடப்பட்டிருந்த இவ்வாலயத்தை எனது தந்தையார் முருகேசு வாத்தியார் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் திறந்து பூசை வழிபாடுகள் ஆற்றி வந்தார்.

ஏழாலை என்ற பெயர் உருவாகக் காரணமான ஆலயங்களில் முதன்மைத் தெய்வமாக ஏழாலை அத்தியடி விநாயகப் பெருமான் திகழ்கிறார் என்றார்.

{சிறப்புத்தொகுப்பு மற்றும் காணொளி:- ஏழாலையிலிருந்து செ.ரவிசாந்-}