யாழ். நல்லூரில் இடம்பெற்ற கல்வி ஆய்வுக் கருத்தரங்கு (Videos)

377

யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நல்லூர் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் “மனித வள அபிவிருத்தியில் கல்வியின் பங்கு” எனும் தொனிப் பொருளிலான கல்வி ஆய்வுக் கருத்தரங்கு நிகழ்வொன்று யாழ். நல்லூரிலுள்ள யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10)காலை-09.30 மணி முதல் இடம்பெற்றது.

சாதனைத் தமிழன் கலாநிதி எதிர் வீரசிங்கம் தலைமையில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கு நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாட் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதாராஜப் பெருமாள், மின் பொறியியல் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்,இளைப்பாறிய பொறியியல் பேராசிரியர் எஸ்.இராஜேந்திரா, இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபையின் இளைப்பாறிய உதவி செயலாளர் எஸ். கிருஷ்ணானந்தன்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்லூரி பணிப்பாளர் யூட் வோல்ரன்,சிகரம் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் கோ. றுஷாங்கன்,குருநகர் உயர் தொழல்நுட்பவியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். ஹரிகரகணபதி,கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரி தொழில்காட்டல் வழிகாட்டி உத்தியோகத்தர் வேலாயுதம் சபேசன்,யாழ்ப்பாணம் தொழிற்பயிற்சி அதிகார சபையின் பணிப்பாளர் ரி.சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளாற்றினார்.

மேற்படி கருத்தரங்கு நிகழ்வில் யாழ்ப்பாணம்,வடக்கு மாகாணத்தில் கல்வியின் தற்போதைய நிலை,கல்வி பின்னடைவிற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் கல்வித்துறை சார்ந்த தொழில்காட்டி ஆலோசனைகளும் துறைசார்ந்தவர்களால் ஆற்றப்பட்டது. கருத்தரங்கைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இதேவேளை, இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தின் இணைப்பாளர் வி. நிரஞ்சன்,புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:-எஸ்.ரவி-}