சாலை விதிகளைப் பின்பற்றுபவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்: அசத்தும் பொலிஸார்! (Photos)

174

பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காக இந்தியாவின் ஒடிசா மாநிலம் கியோஞ்சார் மாவட்டப் பொலிஸார் புதிய நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது வரை அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல்,விபத்து ஏற்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபடாமல் எந்தவித அபராதமும் கட்டாமல் சாலை விதிகளை முறையாக பின்பற்றி வருபவரா நீங்கள். அவ்வாறெனில் உங்களுக்காக காத்திருக்கிறது சிறப்புப் பரிசு.

அதாவது 100 ரூபா ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் என்பவற்றைப் போக்குவரத்துப் பொலிஸார் வழங்குகின்றனர்.

மேற்படி நடைமுறை நாட்டிலேயே முதல்முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கியோஞ்சர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெய் நாராயண் பங்கஜ் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த சனிக்கிழமை முதல் புதிய நடவடிக்கையைக் கையிலெடுத்துள்ளோம். இதுவரை சாலை விதிகளைப் பின்பற்றிச் செயற்பட்ட 50 வாகன ஓட்டிகளுக்கு ரொக்கமும், சான்றிதழ்களும் அளித்துள்ளோம்.

சாலைப் பாதுகாப்பு நிதியைக் கொண்டு சாலை விதிகளை மதித்து நடப்பவர்களுக்குப் பரிசளிக்கிறோம். இதன் மூலம் சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்றி நடக்க ஆர்வம் உண்டாகும். மேலும் சாலை விபத்துக்களும் தவிர்க்கப்படும் என்றார்.