வடக்கில் முதன்முறையாக பெளத்த மாநாடு: புதிய ஆளுநர் தீவிரம்!

108

வடக்கு மாகாணத்திலேயே முதன்முறையாக பௌத்த மாநாடொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவனே குறித்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிய வருகிறது. இதற்கமைய வவுனியாவிலுள்ளபோதிதக்‌ஷணராமய விகாரையில் அடுத்த மாதம்-22 ஆம் திகதி இந்த மாநாடு நடாத்தப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் அனுசரணையுடனும், படையினரின் துணையுடனும் பௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே முதன்முறையாக பௌத்த மாநாடொன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் வாழும் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுகொள்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமென வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் இதுவரை பௌத்த மாநாடு எதுவும் நடாத்தப்படாத நிலையில் பௌத்த மதம் பற்றிய ஆய்வுகள் பலவற்றை முன்னெடுத்து வந்த சுரேன் ராகவன் வடக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக மேற்படி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.