தமிழரசுக் கட்சிக்கு மாத்திரம் உரித்து வழங்கப்படவில்லை!: தர்மலிங்கம் சித்தார்த்தன் அதிரடி (Video)

197

தமிழரசுக் கட்சியின் தலைவரைத் தெரிவு செய்யும் தமிழரசுக் கட்சிக்கிருக்கிறது.ஆனால்,தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவரைத் தீர்மானிக்கும் பொறுப்பு தனியொரு கட்சிக்கு மாத்திரம் வழங்கப்படவில்லை எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை(12)பிற்பகல் இடம்பெற்றது.

குறித்த விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அவரிடம் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு வழங்கி விட்டுத் தலைமைப் பொறுப்புக்குச் எம்.ஏ. சுமந்திரனை நியமிப்பது தொடர்பில் கட்சியின் அடுத்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிக் கட்சியென்ற அடிப்படையில் இதுதொடர்பான உங்கள் நிலைப்பாடு என்ன என வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மூன்று கட்சிகளின் கூட்டு. இந்த நிலையில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகள் இதுதொடர்பில் எதுவும் கதைக்கவில்லை.

எனவே,எங்களைப் பொறுத்தவரை சம்பந்தர் அண்ணன் தான் இன்றும் கூட்டமைப்பின் தலைவராகவுள்ளார்.

சம்பந்தனுக்கு முதுமை மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யாரென்பதைத் தீர்மானிக்க வேண்டியது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் மூன்று கட்சிகளினதும் கடமையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:-எஸ்.ரவி-}