சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் இறுதியாத்திரை சொந்த ஊரில்…: கிராம மக்கள் வரவேற்பு! (Video)

557

யாழ்.குப்பிழானைப் பிறப்பிடமாகவும்,கோண்டாவில் கிழக்கை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட ஈழத்து அறிஞர் சிவசுப்பிரமணியம் மகாலிங்கம்(சிவமகாலிங்கம்)நேற்றுப் புதன்கிழமை(13)காலமானார்.

அவரது இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அவரது பூதவுடல் அவரது சொந்தவூரான யாழ்.குப்பிழானுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குப்பிழான் விவசாய சம்மேளனத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து அவரது பூதவுடல் குப்பிழான் காடகடம்பை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்படும்.

இந்நிலையில் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் பூதவுடல் அவரது பிறந்தவூருக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டுத் தகனம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தவர்கள் எடுத்துள்ள முடிவுக்கு கிராம மக்கள் வரவேற்பு வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பில் ஈழத்தமிழர்களால் ‘ஆசுகவி’ என அன்புடன் போற்றப் பெற்ற கல்லடி வேலுப்பிள்ளையின் பேர்த்தியார் ஐயாத்துரை நீலாம்பிகை ஆச்சி(வயது-93) கருத்துத் தெரிவிக்கையில்,

சிறுவயதிலிருந்தே எனக்கு அவரைத் தெரியும். என் கைகளால் தூக்கி வளர்த்த பிள்ளை தான் சிவமகாலிங்கம்.

சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் மீது அதிக பக்தியுடையவர். இவ்வாலயத்திற்கு வருகை தரும் போதெல்லாம் என் வீடு தேடி வருவார்.

கடந்த கால யுத்தத்தால் குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்குச் சேதங்கள் ஏற்பட்டாலும் ஆலயத்திலுள்ள மூலஸ்தான விக்கிரகத்திற்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை. ஆலயத்தின் நிலையைப் பார்த்து நாங்கள் அழுத போது “என்ர பிள்ளையார் ஒருவித காயமுமில்லாமல் இருக்கிறார், நீங்கள் அழாதீங்கோ!” என எங்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறினார்.

அவர் தனது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக வெளியூர் சென்று வசித்தாலும் தான் பிறந்து வளர்ந்த கிராமத்தின் மீது அவருக்குத் தீராத பற்றிருந்தது. எனவே, சமயப் பணிகள் பல ஆற்றி எமது கிராமத்திற்குப் பெருமை சேர்த்த அவரது தகனக் கிரியை அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தில் செய்வது தான் பொருத்தமானது.

அவரது இறுதி ஆசை கூட இதுவாகத் தானிருந்தது என்றார்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- எஸ்.ரவி-}