முதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்புகிறது இலங்கை! (Photos)

547

முதலாவது ஆய்வு செய்மதியை இலங்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக ஆதர் சி கிளார்க் நிறுவகம் தெரிவித்துள்ளது.

ராவணா-1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செய்மதி மிகவும் சிறியளவிலான சதுர வடிவத்தில் அமைந்துள்ளது.

இந்த செய்மதியை ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவகத்தைச் சேர்ந்த இளம் ஆய்வுப் பொறியியலாளர்களான தரிந்து தயாரத்னவும், துலானி சாமிக்கவும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

1.1 கிலோ எடையும்,1000 கியூபிக் சென்ரி மீற்றர் அளவும் கொண்ட இந்த செய்மதி ஜப்பானின் யூஷூ தொழில்நுட்ப நிறுவகத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செய்மதி ஜப்பானின் விண்வெளி கண்டுபிடிப்புகள் முகவர் அமைப்பினால் நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இது அமெரிக்காவின் சைனஸ்-1 விண்வெளி ஓடத்தின் மூலம் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு எதிர்வரும் ஏப்ரல்- 17ஆம் திகதி அனுப்பி வைக்கப்படும்.

இது பூமியிலிருந்து சுமார்-400 கிலோ மீற்றர் தொலைவில் விண்வெளியில் நிறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த செய்மதி இலங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைப் படம் பிடித்தல் உள்ளிட்ட ஐந்து பணிகளை மேற்கொள்ளுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.