உலகே நீ ஏன் ஊமையாய் இருக்கிறாய்?: கிளிநொச்சியில் கேட்ட அழுகுரல்கள் (Videos)

436

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதிகோரி கிளிநொச்சியில் திங்கட்கிழமை(25) காலை-09 மணி முதல் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமும் பேரணியும் நடாத்தப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான நீதி கேட்டுக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்த போதிலும் உரிய நீதி எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஐக்கியநாடுகள் சபையின் 40 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாத நிலையில் இலங்கை அரசிற்கு இனியும் கால நீடிப்பை வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்திக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் குறித்த போராட்டம் நடாத்தப்பட்டது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலில் ஆரம்பமான பேரணி 155 ஆம் கட்டையில் அமைந்துள்ள ஐக்கியநாடுகள் சபை அலுவலகம் வரை சென்றது. அதனைத் தொடர்ந்து அங்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டது.

வடக்கு,கிழக்கிலுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி, விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்கள், மத குருமார்கள், அரசியல்வாதிகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலை மாணவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்,ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

கிளிநொச்சி நகரமே காணாமல் போகச் செய்யப்பட்ட உறவுகளுக்காக மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “உலகே நீ ஏன் ஊமையாய் இருக்கிறாய்?”,”பதில் சொல்…பதில் சொல்…சர்வதேசமே பதில் சொல்!”, பதில் சொல்…பதில் சொல்….ஐ. நாவே பதில் சொல்”,”சர்வதேச நீதி வேண்டும்”, “இலங்கைக்கு கால அவகாசம் வழங்காதே”, “எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்!”,”உங்கள் கைகளில் ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எங்கே?”, “நாங்கள் கண்ணீருடன் தான் தொடர்ந்தும் வாழ வேண்டுமா?”,”இன்னும் எத்தனை தடவை ஏமாற்றுவீர்?”, “உறவுகளை எத்தனை காலம்தான் தேடுவது?”, “மக்கள் பிரதிநிதிகளே…எமது மக்களின் கண்ணீர் உங்களுக்கு வெறும் தண்ணீரா?” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கியிருந்ததுடன் பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு காணாமல் ஆக்கப்பட்ட “எங்கள் உறவுகள் எங்கே?” என மன்றாட்டமாகக் கேட்டுக் கண்ணீரால் விழிகள் நனைய அழுது புலம்பினர். அவர்களின் அழுகுரல்களால் கிளிநொச்சி நகரமே சோகத்தில் மூழ்கியது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்துத் தெரிவிக்கையில்,

தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுடைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பன்னாட்டுச் சமூகத்துடன் நெருங்கிப் பழகி வாய்ப்பினைப் பெற்ற போதும் எங்களைப் போன்ற பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்காக வாய்திறந்து பேசுவதில்லை. எங்களுக்காக நீதி பெற்றுத் தருவதாக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

ஆனால்,தற்போது அவர்கள் பன்னாட்டு நீதி விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவையிலிருந்து இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாத்து வருகிறார்கள்.

கடந்த-2019 ஆம் ஆண்டு மேமாதம் போரின் முடிவில் எங்களில் பலரும் நாங்களாக முன்வந்து எங்கள் சிறார்கள் உள்ளிட்ட குடும்பத்தவர்கள் பலரை இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் கையளித்தோம். அவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதெனத் தரப்பட்ட வாக்குறுதிகளே நம்பியே எங்கள் சொந்தங்களை ஒப்படைத்தோம்.

ஆனால், அவ்வாறு ஒப்படைத்துப் பத்து ஆண்டுகளான போதும் எங்கள் உறவுகள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தப் பின்னிற்கிறது.

அழுது அழுது களைத்துப் போய்விட்ட நாங்கள் கண்மூடுவதற்குள் எங்கள் உறவுகளைக் காண விரும்புகிறோம் எனக் கடும் ஆதங்கத்துடன் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டனர்.

{நேரடி ரிப்போர்ட் மற்றும் காணொளிகள்:- பானு(யாழ்ப்பாணம்)}