யாழ். கோண்டாவிலில் விருந்தினர்களை பாரம்பரிய முறைப்படி வரவேற்ற மாணவர்கள் (Video)

324

யாழ்.கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை 2016-2020 தேசிய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய கட்டடங்களின் திறப்பு விழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(01) முற்பகல்-11.30 மணி முதல் இடம்பெற்றது.

மேற்படி வித்தியாலய அதிபர் இ.ஹஸ்ரன் றோய் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ. சேனாதிராசா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், யாழ்.கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி. ரவிச்சந்திரன், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் அ. தியாகமூர்த்தி,யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் முதல்வர் அ. ஞானசம்பந்தன் ஆகியோர் ஏனைய விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

குறித்த விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களை மாணவ, மாணவிகள் இணைந்து பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வணக்கம் தெரிவித்த அவர்கள் அவர்களை கைலாகு கொடுத்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து தவில்,மிருதங்கம், புல்லாங்குழல் உள்ளிட்ட பாரம்பரிய முறைப்படி விருந்தினர்கள் வித்தியாலய மண்டபம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பாடசாலையில் அமைக்கப்பட்ட இரண்டு மேல் மாடிக் கட்டடங்களை தனித்தனியாக சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட மாடிக் கட்டடங்களில் ஆய்வு கூடம் அமைந்துள்ள கட்டடம் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் கட்டடத்தில் ஆய்வு கூடத்துடன் கணனிக் கூடம், நவீன இலத்திரனியல் நூலகம், கணித அறை என்பன தனித்தனியான பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன.

இன்னொரு மாடிக் கட்டடம் வகுப்பறைகளை மாத்திரம் கொண்ட சுமார்-75 இலட்சம் ரூபா செலவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

நகரத்திலுள்ள பாடசாலைகளுக்கு ஈடாக கிராமப் புறப் பாடசாலை மாணவர்களை வளர்த்தெடுக்கும் நோக்குடனேயே கடந்த-2015 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற நல்லாட்சி அரசாங்கம் மேற்படி திட்டத்தை நடைமுறைப்படுத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}