பெண்கள் மட்டும் ஏன் கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டும்?: கேட்கிறார் சர்வதேச ஊடகவியலாளர் துளசி!! (Video)

199

ஆண்கள் வேட்டி,சால்வை உடுக்கிறார்களாயினும் தினமும் உடுப்பதில்லையே. இவ்வாறான நிலையில் நாங்கள் மட்டும் ஏன் தினம் தோறும் சேலை உடுக்க வேண்டும். பெண்கள் மட்டும் ஏன் கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என சர்வதேச ஊடகவியலாளரும், செயற்பாட்டாளருமான துளசி முத்துலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு, சமூக மேம்பாட்டுக் கழகம், சமூக மேம்பாட்டு இணையம் ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் விசேட பொதுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(10)பிற்பகல் யாழ். கொக்குவில் சந்தியிலுள்ள கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் முஸ்லீம் பெண்கள் தங்கள் உடல்கள் முழுவதையும் கறுப்பு ஆடையால் மூடி அணிய வேண்டுமென்ற நடைமுறை வழக்கத்திலுள்ளது.

ஆனால்,முஸ்லீம் பெண்களுக்குப் பக்கத்தில் செல்லும் கணவர் மாத்திரம் சண் கிளாஸஸ் அணிந்து சோட்ஸ் உம் ரீஷேர்ட்டும் போட்டுக் கொண்டு போவார். ஏன் அவருக்கு மட்டும் அந்தந்த நாடுகளின் கலாசார பொறுப்பில்லை? இது போன்ற நிலைமை தான் இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் தமிழ்ப் பெண்களுக்கும் காணப்படுகின்றது.

பெண்கள் ஸ்கேட் அணிந்தால் நாங்கள் கிள்ளுவோம் என்ற நிலையில் ஆண்களின் மனநிலை உள்ளது. நாங்கள் இதுதொடர்பாக முறையிட்டாலும் நீர் அப்படி ஏன் போனீர்? என சமூகம் கேள்வி கேட்கிறது. ஆனால், ஆண்களிடம் நீ ஏன் அவ்வாறு நடந்து கொண்டீர்? எனக் கேள்வி கேட்பார் எவருமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,மேற்படி உரையின் போது சர்வதேச ஊடகவியலாளரும், செயற்பாட்டாளருமான துளசி முத்துலிங்கம் ஆண்களுக்கெதிராக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- எஸ்.ரவி-}