வடக்கில் தாய், சேய் மரணத்தைக் கட்டுப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும்: வைத்தியகலாநிதி கேதீஸ்வரன் காட்டம் (Video)

122

தேசிய மட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது வடமாகாணத்தின் தாய்,சேய் மரண வீதம், குடிப் பேற்று மரண வீதம் என்பன அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. எனவே, இவ்வாறான நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப் பெற்ற சிசுக்கள் விசேட சிகிச்சைப் பிரிவு நேற்றுச் செவ்வாய்க்கிழமை முற்பகல்(12) சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் இன்னும் எங்களுக்கு மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. இதுமட்டுமன்றிப் பல்வேறு காரணங்கள் தாய், சேய் மரண வீதம் அதிகரிப்பதற்கு காரணமாகவுள்ளது. இவற்றை நாங்கள் படிப்படியாக நிவர்த்தி செய்து வருகின்றோம்.

எதிர்காலத்தில் தாய் மரண வீதம், சேய் மரண வீதம், குடிப்பேற்று மரண வீதம் ஆகிய மூன்றையும் நாங்கள் குறைப்பதன் மூலம் வடமாகாண மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும். இதன் மூலம் தேசிய மட்டத்திலும் மேற்படி மரண வீதங்களைக் குறைப்பதற்கு எங்களாலான பங்களிப்பை வழங்க முடியும்.

யுனிசெப் நிறுவனமானது சுமார் மூன்று தசாப்தகாலமாக எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் யுத்தம் நடந்த பகுதிகளில் மட்டுமல்லாமல் வடமாகாணத்தின் சகல பகுதிகளிலும் தாய்- சேய் நல சேவைகளை மேம்படுத்துவதற்காக யுனிசெப் எங்களுடன் தோளோடு தோள் கொடுத்து வந்துள்ளது.

கடந்த- 1998 ஆம் ஆண்டு முதல் நான் இந்தச் சேவையில் கடமையாற்றி வந்துள்ளேன். நான் வவுனியா மாவட்டத்தில் சேவையாற்றிய காலகட்டத்தில் பலருடனும் இணைந்து பணியாற்றியுள்ளேன். அந்தக் காலகட்டத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதிகளில் போலியோ தடுப்பு மருந்தை வழங்குவதில் எங்களுக்கு யுனிசெப் நிறுவனம் பல்வேறு வழிகளிலும் உதவி செய்துள்ளது.

யுத்தம் முடிவுற்ற பின்னர் வடமாகாணத்திலுள்ள தாய்- சேய் நிலையங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு யுனிசெப் நிறுவனம் பலவேறு வழிகளிலும் எங்களுக்கு உதவி செய்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளிலும் மகப்பேற்று நிலையங்களையும், சிறுவர் நல விடுதிகளையும் யுனிசெப் நிறுவனம் எங்களுக்கு அமைத்துத் தந்துள்ளனர்.

வடமாகாணத்தில் தாய்,சேய் நல சேவைகளை மேம்படுத்துவதற்காகத் தொடர்ந்தும் கைகொடுத்து வருகின்ற யுனிசெப் நிறுவனத்திற்கு நன்றிகள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- எஸ்.ரவி-}